பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடுமையான தனிமைச் சிறைவாசத்திற்குப் பின் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீண்டகாலமாகக் கோரப்பட்டு வந்த மருத்துவ அனுமதியைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூறப்படும் இந்தத் தனிமைச் சிறைவாசம், இம்ரான் கானின் உடல்நிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவும் அரசின் மெத்தனமும்
தொடர் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இம்ரான் கானை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றவும், முறையான சிகிச்சைகளை வழங்கவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடிக்குப் பிறகே, அரசு இந்த மருத்துவச் சிகிச்சைக்கு மசிய நேர்ந்துள்ளது.
போர்க்களமாய் மாறிய மருத்துவமனை வளாகம்
இம்ரான் கான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தெஹரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியினர் மருத்துவமனைக்கு வெளியே பெருமளவில் திரண்டனர். நிலைமை கைமீறிப் போய்விடக் கூடாது என்பதற்காக, கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகம் ஒரு போர்க்களம் போல் மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறைச்சாலையில் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களும், முன்னாள் பிரதமருக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனைகளுக்குப் பின் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் அடுத்த கட்டப் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது.
ஏமன், சோமாலியா கடற்பகுதியில் பரபரப்பு: 22 இந்தியர்களுடன் 2 கப்பல்களைக் கடத்திய கடற்கொள்ளையர்கள்!
