Homeசெய்திகள்உலகம்தீபாவளியை அரசு விடுமுறையாக்க அமெரிக்கா திட்டம்: கிரேஸ் மெங் மீண்டும் மசோதா அறிமுகம்!

தீபாவளியை அரசு விடுமுறையாக்க அமெரிக்கா திட்டம்: கிரேஸ் மெங் மீண்டும் மசோதா அறிமுகம்!

-

- Advertisement -

இந்தியாவின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மீண்டும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் மெங் (Grace Meng) இந்த மசோதாவை பிரதிநிதிகள் சபையில் மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.

we-r-hiring

19 எம்.பி.க்கள் ஆதரவுடன் தீபாவளி மசோதா!

தீபாவளி பண்டிகையை அமெரிக்காவின் கூட்டாட்சி அரசு விடுமுறைப் பட்டியலில் சேர்க்கும் நோக்கில் ‘Diwali Day Act’ என்ற பெயரில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, சுஹாஸ் சுப்ரமணியம், ஸ்ரீ தானேதர், ரோ கன்னா, அமி பெரா உள்ளிட்ட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆசிய பசிபிக் அமெரிக்க கூட்டமைப்பின் தலைவராக உள்ள கிரேஸ் மெங், தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையும், அறியாமையின் மீது அறிவும் வெற்றி பெறுவதைக் குறிக்கும் பண்டிகை என்று தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினருக்கும் அங்கீகாரம்!

அமெரிக்காவில் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பவுத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், இந்துக்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு எதிரான வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ள கிரேஸ் மெங், தீபாவளியை கூட்டாட்சி அரசு விடுமுறையாக அங்கீகரிப்பது இந்த சமூகத்தினர் அமெரிக்காவின் மதிப்புமிக்க அங்கத்தினர்கள் என்பதை வெளிப்படுத்தும் வலுவான செய்தியாக அமையும் என்று கூறியுள்ளார்.

மேலும், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை மதிக்கும் நாடாக அமெரிக்கா திகழ்வதற்கு இந்த அங்கீகாரம் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேறினால் அமெரிக்காவின் 12-வது தேசிய விடுமுறை!

இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதல் பெற்றால், தீபாவளி அந்நாட்டின் 12-வது கூட்டாட்சி அரசு விடுமுறையாக அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி அன்று விடுமுறை கிடைக்கும்.

ஏற்கெனவே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் கிரேஸ் மெங் இதே மசோதாவை முதன்முறையாக பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியிருந்தார். அப்போது அது மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு மசோதா அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நகரவில்லை.

தற்போது 19 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரிடையே இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.

எனினும், மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, தீபாவளிக்கு அமெரிக்காவில் அரசு விடுமுறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

MUST READ