எகிப்து நாட்டில் இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 125 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கெய்ரோ அருகே நிகழ்ந்த இந்த விபத்து அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பின்னால் வந்த ரெயில் மோதி விபத்து
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து சுமார் 76 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கிசாவில் இருந்து பயூம் நகரை நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில், கெய்ரோவில் இருந்து அஸ்வான் நகருக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு ரெயிலின் பின்புறத்தில் மோதியுள்ளது. இந்த மோதலின் வேகத்தில் பல ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன.
7 பேர் உயிரிழப்பு; காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
இந்த விபத்தில் முதற்கட்டமாக 7 பேர் உயிரிழந்ததாகவும், 112 பேர் காயமடைந்ததாகவும் எகிப்து சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. பின்னர் வெளியான தகவல்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவான விசாரணைக்கு அதிபர் உத்தரவு
விபத்து குறித்து அறிந்த எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி, உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குக் காரணமாக அலட்சியம் அல்லது தவறு இருந்தது விசாரணையில் தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விபத்துக்கான தொழில்நுட்பக் காரணங்கள் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மீட்புப் பணியாளர்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் கிரேன்களின் உதவியுடன் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் ரெயில்வே பாதுகாப்பு குறித்த கேள்வி
எகிப்தில் கடந்த காலங்களிலும் பல மோசமான ரெயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, 2002-ம் ஆண்டு கெய்ரோவுக்கு தெற்கே நிகழ்ந்த ரெயில் தீ விபத்தில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தற்போது இரண்டு பயணிகள் ரெயில்கள் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம், எகிப்தின் ரெயில்வே பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
