வனிதா விஜயகுமாரின் மிஸ்ஸஸ் & மிஸ்டர் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் தனது மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் மிஸ்ஸஸ் & மிஸ்டர் எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படத்தில் வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். மேலும் ஶ்ரீமன், சகிலா, கிரண், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இதற்கு இசை அமைத்திருக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படமானது ஜூன் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில் 45 வயதாகும் வனிதா விஜயகுமார் குழந்தை பெற வேண்டும் என விரும்புகிறார்.
ஆனால் ராபர்ட் இந்த வயதில் குழந்தை பெற்று வளர்ப்பது கடினமான விஷயம் என்று யோசிக்கிறார். எனவே பல சிக்கல்களை தாண்டி வனிதா விஜயகுமார் தான் விருப்பப்பட்டதை போல் குழந்தையை எப்படி பெற்றெடுக்கிறார் என்பதை ஜாலியான கதைக்களத்தில் சொல்லி இருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.