உலகக் கால்பந்து வரலாற்றில் பல சாதனைகள் படைக்கப்பட்டு, தகர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்து வரும் சாதனைகள், கால்பந்து உலகம் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன.


உலகக் கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ‘கோல்டன் பால்’ (Golden Ball) விருதை இரண்டு முறை வென்ற உலகின் ஒரே வீரர் என்ற பெருமை ஏற்கனவே மெஸ்ஸியையே சாரும். கடந்த 2014 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டினாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இந்த விருதை அவர் வென்றிருந்தார். அந்த வரிசையில், கடந்த 4 உலகக் கோப்பை தொடர்களில் 3 முறை அர்ஜென்டினாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று, தற்போதும் அர்ஜென்டினாவின் இறுதிப் போட்டிப் பயணத்திற்கு ஒற்றை மனிதனாக மெஸ்ஸி அச்சாணியாகத் திகழ்கிறார்.
நடப்புத் தொடரிலும் தொடரும் மெஸ்ஸி மேஜிக்!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி ஆடியுள்ள 7 போட்டிகளில் 8 கோல்களை அடித்து, தொடரின் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி, சக வீரர்கள் கோல் அடிப்பதற்காக 4 அசிஸ்ட்களையும் (Assists) செய்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 12 கோல் பங்களிப்புகளை (G/A) அவர் வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி வழங்கிய 2 அசிஸ்ட்கள் மூலம், 11 கோல் பங்களிப்புகளுடன் முதலிடத்தில் இருந்த பிரான்சின் முன்னணி வீரர் கிலியன் எம்பாப்பேயை முந்தி மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
1970-க்குப் பிந்தைய புதிய சாதனை!
உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக கோல் பங்களிப்பை வழங்கிய வீரர்களில் மெஸ்ஸிக்கு முன்னால் அடெமிர், கோசிஸ், ஜி. முல்லர், ஃபொன்டைன் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் 1970-ஆம் ஆண்டுக்கு முந்தைய பழமையான சகாப்தத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக கோல்களுக்கு (12 கோல் பங்களிப்புகள்) பங்களித்த ஒரே மனிதர் என்ற வரலாற்றுச் சாதனையை மெஸ்ஸி தற்போது படைத்துள்ளார்.
இரட்டை உலகக் கோப்பை சாதனை
உலகக் கோப்பைத் தொடர்களில் தலா 10 அல்லது அதற்கு மேற்பட்ட கோல் பங்களிப்புகளை (கோல் அல்லது அசிஸ்ட்) வழங்கி, இரண்டு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் இந்த மைல்கல்லை எட்டிய உலகின் ஒரே வீரர் மெஸ்ஸி தான். கடந்த 2022 உலகக் கோப்பையில் 10 கோல் பங்களிப்புகளை வழங்கியிருந்த அவர், இந்த முறை 12 கோல் பங்களிப்புகளை வழங்கி அசத்தியுள்ளார். இத்தகு அசாத்தியமான சாதனைகள் மூலம், இந்த முறையும் மெஸ்ஸிக்கு ‘கோல்டன் பால்’ விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அர்ஜென்டினாவை மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கு சுமந்து வந்துள்ள லியோனல் மெஸ்ஸி தான் உலகக் கோப்பை வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் (G.O.A.T) என்பதை இந்தத் தரவுகள் மீண்டும் நிரூபித்துள்ளன.
இறுதி நிமிடங்களில் 2 அசிஸ்டுகள் செய்து அசாத்திய வெற்றி; உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை
