Homeசெய்திகள்தமிழ்நாடுFCRA சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழக சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

FCRA சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழக சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

-

- Advertisement -

ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டுவந்துள்ள தனித்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஜவாஹிருல்லாவின் வாதங்கள்

சட்டப்பேரவையில் பேசிய ஜவாஹிருல்லா, “கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் சிறுபான்மையினரின் பங்களிப்பு அளப்பரியது. பள்ளிகள் இல்லாத காலத்திலேயே கிறித்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி சமூகத்தின் அறிவுக்கண்ணைத் திறந்தன. இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்குவது, மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது எனப் பல அறப்பணிகளைச் செய்துவரும் தொண்டு நிறுவனங்களைச் சிதைக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது” என்றார்.

FCRA சட்டமே தேவையற்றது

மேலும் அவர் கூறுகையில், “வெளிநாட்டு நிதி தொடர்பான பரிவர்த்தனைகளைத் தற்போதைய வங்கிச் சட்டங்கள் மற்றும் வருமான வரிச் சட்டங்களின் மூலமே கண்காணிக்க முடியும். அவ்வாறிருக்கையில், FCRA என்ற பெயரில் தனிச்சட்டம் எதற்கு? இது தொண்டு நிறுவனங்களை முடக்குவதற்கான தேவையற்ற சட்டமாகும். ஏற்கனவே டெல்லியில் உள்ள எஸ்பிஐ கிளையில் மட்டுமே கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மேலும் நெருக்கடியைத் தருகின்றன” எனச் சாடினார்.

சொத்துகளை அபகரிக்கும் முயற்சி

புதிய சட்டத் திருத்தத்தில் உள்ள ‘டெசிக்னேட்டட் அத்தாரிட்டி’ (Designated Authority) குறித்த அச்சத்தைப் பதிவு செய்த ஜவாஹிருல்லா, “FCRA உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டாலோ அல்லது அனுமதி மறுக்கப்பட்டாலோ, அந்த நிறுவனங்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது. அன்னை தெரேசாவால் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் கூட இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அறப்பணிகளுக்காக உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகள் உதவி பெற்று வளர்ந்த நிறுவனங்களை அபகரிக்கும் நோக்கத்தில் தான் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது” என விமர்சித்தார்.

இறுதியாக, இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் மிகவும் காலத்திற்கு ஏற்றது என்றும், இதனை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுத் துறைகளில் 13.30 லட்சம் காலிப் பணியிடங்கள்: இபிஎஸ் கடும் விமர்சனம்

MUST READ