உலகப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான எண்ணெய் வரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அமெரிக்காவின் புதிய பிரதேசம் எனக் குறிப்பிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படத்தை வெளியிட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் அனைத்து Water mines (நீருக்கடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகள்) அகற்றப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்த கூற்றுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


AI படம் மற்றும் டிரம்பின் கூற்றுகள்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவிவரும் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டார். ஈரானுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இடையே உள்ள நீல நிற நீரிணைப் பகுதியைச் சுட்டிக் காட்டி, அதனை ‘புதிய அமெரிக்கப் பிரதேசம்’ (NEW U.S. Territory) என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து பதிவிட்ட அவர், ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை முழு பலத்துடன் தொடர்வதாகவும் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் இருந்த அனைத்து நீருக்கடியில் வைக்கப்படும் வெடிகுடிகளும் (Water mines) அகற்றப்பட்டுவிட்டதாகவும், நீரிணை திறக்கப்பட்டு வணிகக் கப்பல்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் கடும் எதிர்வினை
டிரம்பின் இந்தக் கருத்துகளுக்கும், AI பட வெளியீட்டிற்கும் ஈரான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi) தனது எக்ஸ் (X) தளத்தில், டிரம்பின் கூற்றுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “ஹோர்முஸ் நீரிணை குறித்த அவரது பிரமைகள் (Delusion) விரைவில் சூழ்நிலைகளாலோ அல்லது எங்களாலோ சரி செய்யப்படும்,” என்று எச்சரித்துள்ளார். மேலும், அவரை “பிரமையில் வாழும் மனிதர்” என்றும் விமர்சித்துள்ளார்.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறுகையில், அமெரிக்கா தனது முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். பொருளாதாரத் தடை நீக்கம், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் போன்ற நிபந்தனைகள் நிறைவேற்றப்படாமல் அப்பகுதியைத் திறக்க அனுமதிக்க மாட்டோம் என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
உலக நாடுகளின் எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்குள்ளான இஸ்ரேலின் தீவிர அணுகுமுறை!
