சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தனமாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர்தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்.


மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா, பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது.
கொடி ஏற்றிவிட்டு முதலமைச்சர் விஜய் பேசுகிறார்… “எல்லோரும் வாக்களித்துவிட்டோம். விஜய்யை வெற்றி வைத்து முதலமைச்சர் ஆக்கிவிட்டோம். எனவே கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் நினைக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்காக இருக்கிற அனைத்து நல்ல திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடியும்” என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்? அவரை நம்பி வாக்களித்தவர்கள், “தவறு செய்துவிட்டோம்” என்று வருந்திக் கொண்டிருக்கிறார்கள். 10 வயது சிறுமி கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டபோது அதை மறைக்க நினைத்தது விஜய் அரசு. “நீங்க ஆக்ஷன் ஹீரோ… தப்பு நடந்தா நடவடிக்கை எடுப்பீங்கன்னு நினைச்சு தானே வாக்களித்தோம்” என்று ஒரு பெண் கதறினாரே. இப்படிப் பல பேரும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
தனது படத்தைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறார் விஜய்.
‘லியோ’ படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமி தான் முதலமைச்சரின் தனிச் செயலாளர். தனது ஜோசியருக்கு மகுடம். தேர்தலுக்கு முன்னதாக தனக்கு செலவு செய்தவருக்கு பதவி. இதுதான் நடக்கிறது. இதை எல்லாம் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் மக்கள் என்று நினைக்கிறாரா விஜய்?
பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள் இல்லை. அதை விஜய் அரசு மறைக்கும் என்பதற்கு உதாரணம் தான் கோவைச் சம்பவம். போதை மருந்து நடமாட்டம் துளியும் கட்டுப்படுத்தப்படவில்லை. போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்த காரணத்தால் கோவை மாணவன் அமுதன் அந்தக் கும்பலால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். அதையே மறைக்கும் வகையில், “கீது கோஷ்டி தகராறால் ஏற்பட்ட மரணம்” என்று சட்டமன்றத்தில் சொன்னார் அமைச்சர் ராம்மோகன்.
அமைச்சர்கள் மீது, எம்.எல்.ஏ.க்கள் மீது வந்த புகார் மீதாவது நடவடிக்கை எடுத்துள்ளாரா விஜய்? திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது விஜய் ரசிகை ஒருவரே பாலியல் புகார் சொன்னார். அந்த ரசிகையை கட்சியைவிட்டு நீக்கிவிட்டு சரவணனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார் விஜய்.
‘அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்’ என குற்றம் சாட்டிய த.வெ.க. வழக்கறிஞர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். பவுடர் பயன்படுத்தி அதை வீடியோ எடுத்துப் போட்ட அமைச்சர் சரத்குமார் இன்னமும் அமைச்சரவையில் இருக்கிறார். 70 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்தை அபகரித்த செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் ரமேஷ் இன்னமும் அமைச்சராக நீடிக்கிறார். எவர்மீதும் இதுவரை விஜய் நடவடிக்கை எடுத்தது இல்லை.
அரசைப் பற்றி விமர்சித்து ட்விட்டர் போட்டால் கைது. நீதிமன்றங்கள் நித்தமும் த.வெ.க. ஆட்சியாளர்கள்மீது தலையில் கொட்டுகின்றன. சொரணையே இல்லை இவர்களுக்கு. இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது ஆட்சி. இதை எல்லாம் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் விஜய்.
சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வரலாறுகளை ஊடகங்கள் வெளியிடும். ஆனால் இம்முறை நடிகை ஒருவருடன் முதலமைச்சர் இதுவரை எத்தனை முறை ஒன்றாக வெளியில் வந்துள்ளார் என்று வரலாறு போடும் கேவலத்தைப் பார்க்கிறோம்.
“விஜய் நன்றாக டான்ஸ் ஆடுவார்” என்பதற்காக ஏறிய மின்சாரக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வார்களா மக்கள்? “விஜய் அழகாகச் சிரிக்கிறார்” என்பதற்காக “சொத்து வரியை எவ்வளவு வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிடுவார்களா தமிழ்நாட்டு மக்கள்?
சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். “உங்களுக்குத்தான் வாக்களித்தோம்… வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறோம்” என்று சொல்லும் வீடியோக்கள்தான் அதிகமாகப் பரவுகின்றன. அதனால்தான், “என்னோடு இருங்கள். போய்விடாதீர்கள்” என்று கழிவிரக்கம் தேடப் பார்க்கிறார் விஜய்.
“100 நாள் ஆட்சி… 25 வருஷம் ஆள்றது அப்புறம்!” – விஜய்க்கு எஸ்பி லட்சுமணன் கடுமையான விமர்சனம்!
