Homeசெய்திகள்சென்னைதமிழ்நாடு அரசை கண்டித்து சாலையோர விற்பனையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு!

தமிழ்நாடு அரசை கண்டித்து சாலையோர விற்பனையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு!

-

- Advertisement -

சென்னை செனாய் நகரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் அலுவலகம் வெளியே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு அரசை கண்டித்துச் சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் சிறுகடை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

we-r-hiring

ஆர்ப்பாட்டம் மற்றும் பங்கேற்பாளர்கள்:

சாலையோர விற்பனையாளர்கள் மற்றும் சிறுகடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு (CITU) அகில இந்தியத் துணைத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மற்றும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வியாபாரிகளின் முக்கியக் குற்றச்சாட்டுகள்:

அமைந்தகரை புல்லா அவென்யூ, புரசைவாக்கம் பிரதான சாலை, வில்லிவாக்கம் மார்க்கெட், டி.பி சத்திரம் பிரதான சாலை, நியூ ஆவடி ரோடு ஆகிய பிரபலமான பகுதிகளில் நீண்டகாலமாக இயங்கிவரும் மார்க்கெட் மற்றும் வியாபார இடங்களை “வியாபாரம் செய்யக்கூடாத இடங்கள்” என அறிவித்து அரசு அதிகாரிகள் அராஜகம் செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், பல இடங்களில் காவல்துறை உதவியோடு கடைகளை அடித்து நொறுக்கி மாநகராட்சி வாகனங்களில் எடுத்துச் செல்வதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

தீக்குளிக்க முயன்ற வியாபாரி:

ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாக, சாலையோர வியாபாரி ஒருவர் தமிழ்நாடு அரசை கண்டித்துத் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களும் காவல்துறையினரும் அவர் மீது தண்ணீரை ஊற்றித் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் பேட்டி:

இறுதியாகச் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு அகில இந்தியத் துணைத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்ததாவது:

“இந்தியாவில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் சுயதொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சுயமாகத் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மக்களை, அரசு மிக மோசமான முரண்பாட்டிற்குள் தள்ளுகிறது. இத்தகைய தவறான நடவடிக்கைகளின் மூலம் மக்களின் வயிற்றில் தமிழ்நாடு அரசு அடித்து வருகிறது.” எனத் தனது வேதனையையும் கண்டனத்தையும் பதிவு செய்தார்.

தாம்பரம்: கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை – மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது – 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு!

MUST READ