Homeசெய்திகள்சென்னைகோயம்பேடு பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு! ரூ.500 ஆக அதிகரிப்பு – ஆம்னி பேருந்து...

கோயம்பேடு பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு! ரூ.500 ஆக அதிகரிப்பு – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்

-

- Advertisement -

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள CMDA பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் திடீரென மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 வரை வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

we-r-hiring

பண்டிகைக் காலங்களில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். டீசல் விலை உயர்ந்துள்ள போதிலும், கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கட்டண முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆன்லைன் செயலிகளில் பேருந்துக் கட்டணங்கள் அதிகமாகக் காட்டப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சங்கத்தின் செயலாளர் மாறன், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ள நிலையிலும், 2023-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண முறையே தற்போதும் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தார். பொதுமக்கள் ஆன்லைன் செயலிகளில் நேரடியாக முன்பதிவு செய்து இதனைச் சரிபார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

வெளிமாநில பேருந்துகள் மீது வரி வசூல் – அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தைக் கடந்து செல்லும் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் மீது சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் மீண்டும் வரி வசூலிக்கப்படுவதாகவும், இதனால் சில பேருந்துகள் சிறைபிடிக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழகத்திலிருந்து சுமார் 1,200 ஆம்னி பேருந்துகள் பிற மாநிலங்களுக்குச் செல்லும் நிலையில், தமிழகத்திற்கு சுமார் 350 வெளிமாநில பேருந்துகள் மட்டுமே வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பண்டிகைக் காலங்களில் வெளிமாநில பேருந்துகள் மீதான வரி வசூல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உரிய தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் மாறன் தெரிவித்தார்.

பார்க்கிங் கட்டண உயர்வால் தொழில் பாதிப்பு

கோயம்பேடு CMDA பேருந்து நிலையப் பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டிருப்பது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் இத்தகைய கட்டண உயர்வுகள் பேருந்து இயக்கச் செலவுகளை அதிகரிப்பதுடன், தொழிலையும் மறைமுகமாகப் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பார்க்கிங் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி முறையான கட்டணத்தில் சேவைகளை வழங்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

MUST READ