சென்னை சிவானந்தா சாலையில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர். மேலும், 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசு வழங்கிய ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அம்சக் கோரிக்கைகள் என்னென்ன?
பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல், பெண் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்தல், மருத்துவக் காப்பீடு வழங்குதல், போனஸ் மற்றும் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கான முன்பணம் வழங்குதல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
14 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதாக வேதனை
இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளர் திலகவதி கூறுகையில், கடந்த 14 ஆண்டுகளாகப் பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். நீண்டகாலமாகத் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்
தங்களது 14 அம்சக் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்திய பணியாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என எச்சரித்தனர்.
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால், வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளர்களின் நீண்டகாலப் பணிச்சூழல் மற்றும் ஊதியப் பிரச்சினைகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு CSK சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 63 பைக்குகள் வழங்கல்!
