சந்தோஷ் நாராயணன் இசையில் தமிழ் இண்டி பாடலுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்; உலகளாவிய இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு!
சுயாதீன (Indie) இசை உலகிலும், திரையுலகிலும் தனது தனித்துவமான குரலால் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் பிரபல தமிழ் பாடகி தீ (Dhee), பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகியான லாரா ராஜுடன் (Lara Raj of KATSEYE) இணைந்து பாடியுள்ள ‘வரி வரி’ (Vari Vari) பாடலின் ரீமிக்ஸ் பதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் – விவேக் கூட்டணி:
முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துத் தயாரிக்க, பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் பாடகி தீயின் காந்தக் குரலில் வெளியான ‘வரி வரி’ என்ற தமிழ் இண்டி பாடல், வெளியான குறுகிய காலத்திலேயே இசைப் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.
சர்வதேசக் கூட்டணியில் ரீமிக்ஸ் அவதாரம்:
‘வரி வரி’ பாடலுக்குக் கிடைத்த உலகளாவிய ஆதரவைத் தொடர்ந்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘KATSEYE’ பாப் இசைக் குழுவைச் சேர்ந்த லாரா ராஜுடன் இணைந்து இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பதிப்பைத் தயாரித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
பாடகி தீ மற்றும் லாரா ராஜ் ஆகிய இருவரின் குரல்களிலும் புதிய பரிமாணத்தில் ஒலிக்கும் இந்த ரீமிக்ஸ் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் வம்சாவளி பெண் கலைஞர்களின் சாதனை:
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு சர்வதேச பெண் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் ஆகியோரின் இந்தக் கூட்டணி, தமிழ் சுயாதீன இசையை உலக அரங்கிற்கு அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
சர்வதேச இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் (Playlist) முதன்மையான இடத்தைப் பிடித்துள்ள இந்தப் பாடலுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
