சென்னை அம்பத்தூர் மண்டலம், 92-வது வார்டுக்கு உட்பட்ட முகப்பேர் பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில், தனியார் அறக்கட்டளை பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ள மாண்டிச்சோரி கற்றல் மையம் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான வகுப்பறைகளின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமை தாங்கி புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் ரேவன் சரண், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் மற்றும் 92-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திலகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு முக்கிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு குறித்து பேசிய அமைச்சர், இந்த வழக்கு தற்போது தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலுக்கக்கூடிய ஒரு பெரிய வழக்காக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய எப்ஸ்டீன் வழக்கைப்போல இந்த வழக்கும் மாறியுள்ளதாகவும், ஒவ்வொரு மணி நேரமும் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆட்சியில் இந்த வழக்கை ஒழுங்காக நடத்தியிருந்தால் இது ஒரு விழிப்புணர்வு வழக்காக மாறியிருக்கும் என்றும், ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், புகார் அளிக்க ஆள் இல்லை என்றும் கூறி வழக்கு மூடப்பட்டது மர்மமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாருக்காக, யாரைத் தப்பவைப்பதற்காக இந்த வழக்கு முடிக்கப்பட்டது என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் பல கோடி ரூபாய் கைமாறி பலரின் வாய்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த ஆட்சியாளர்கள் இந்த வழக்கை ஏன் மூடினார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை என்றும், வெறும் பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே பேசுகின்றனர் என்றும் அமைச்சர் விமர்சித்தார்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இதற்கான உரிய சட்டப் போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
புதிய தலைமைச் செயலகம் – மீனவர்கள் போராட்டம்
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுவது அவர்களின் உரிமை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இறுதி முடிவை முதலமைச்சர்தான் எடுப்பார் என்றும் அவர் கூறினார்.
இதுவொரு கொள்கை முடிவு என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
கூட்டணி குறித்த விளக்கம்
கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது தோழர்கள் என்றும், அவர்களுடன் எந்தவித உரசலும் இல்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தங்களது கூட்டணி தொடர்வதாகவும், வரலாறு தங்களுக்கு வழிகாட்டி என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக முறையில் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும், அதை ஏற்றுக்கொள்வதும் தங்களது ஜனநாயகக் கூட்டணியின் பலம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
காமராஜர் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவாக்கம்: மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்கள்!
