அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, முட்டை என நினைத்து மூன்று கோல்ஃப் பந்துகளை விழுங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்துகள் வயிற்றில் சிக்கியதால் நகர முடியாமல் இருந்த பாம்பை கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி பத்திரமாக மீட்டுள்ளனர்.


3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு
டெக்சாஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரவு நேரத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது அங்கு கிடந்த மூன்று கோல்ஃப் பந்துகளை அந்த பாம்பு முட்டைகள் என தவறாக நினைத்து ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்துகளை விழுங்கிய பிறகு பாம்பால் இயல்பாக நகர முடியாமல் போனதால், அதனை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மயக்கமருந்து கொடுத்து அகற்றிய மருத்துவர்கள்
அமெரிக்காவின் சான் அன்டோனியோவில் உள்ள South Texas Avian & Exotic Hospital-ல் பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் பாம்புக்கு மயக்கமருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்யாமல் கோல்ஃப் பந்துகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாம்பின் உடலை மிகவும் கவனமாக கையாண்டு, பந்துகளை மெதுவாக அதன் வாய் நோக்கி நகர்த்தினர். பின்னர் ஒவ்வொரு பந்தாக வெளியே எடுக்கப்பட்டது. முதல் பந்தை அகற்றிய பிறகு, மேலும் இரண்டு பந்துகள் பாம்பின் உடலில் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர்.
அறுவை சிகிச்சை இல்லாமல் மீட்பு
மூன்று கோல்ஃப் பந்துகளும் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்ட இந்த வித்தியாசமான மீட்பு நடவடிக்கையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“மறக்க முடியாத சம்பவம்”
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில், மூன்று கோல்ஃப் பந்துகளை பாம்பு விழுங்கியதும், அறுவை சிகிச்சையின்றி அவற்றை பாதுகாப்பாக அகற்ற முடிந்ததும் தங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு மற்றும் அரிய உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது எதிர்பாராத பல்வேறு சூழல்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 27 பேர் உயிரிழப்பு – பலர் படுகாயம்!
