Homeசெய்திகள்உலகம்இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு புதிய சவால்? கிரீன் கார்டு PERM விதிகளில் டிரம்ப் நிர்வாகம் மாற்றம்

இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு புதிய சவால்? கிரீன் கார்டு PERM விதிகளில் டிரம்ப் நிர்வாகம் மாற்றம்

-

- Advertisement -

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர்கள், வேலைவாய்ப்பு அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு நடைமுறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்க தொழிலாளர் நலத்துறை முன்மொழிந்துள்ளது.

இதன்படி, கிரீன் கார்டுக்கான நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையான PERM விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன.

அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதும், வெளிநாட்டு ஊழியர்களை நிரந்தரமாகப் பணியமர்த்துவதற்கு முன்பு தகுதியான அமெரிக்கர்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்துவதும் இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், EB-2 மற்றும் EB-3 பிரிவுகளில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரின் நடைமுறைகள் நீளக்கூடும்.

இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

30 நாள்களுக்குப் பதிலாக 90 நாள்கள் விளம்பரம்:

தற்போதைய PERM நடைமுறையில், வெளிநாட்டு ஊழியருக்கு நிரந்தரப் பணிக்கான ஸ்பான்சர்ஷிப் வழங்குவதற்கு முன்பு, அந்தப் பணியிடத்துக்குத் தகுதியான அமெரிக்கத் தொழிலாளர்கள் கிடைக்கிறார்களா என்பதை நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்காக தற்போது குறிப்பிட்ட காலத்திற்கு வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

புதிய முன்மொழிவின்படி, நிறுவனங்கள் தங்களது இணையதளங்கள், வேலைவாய்ப்பு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட மின்னணு வழிகளில் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

இந்த விளம்பரங்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு நடைமுறையில் இருக்க வேண்டும்.

அந்த நிறுவனம் அதேபோன்ற வேலைவாய்ப்புகளுக்கு வழக்கமாக 90 நாள்களுக்கும் அதிகமாக விளம்பரம் வெளியிடும் நிறுவனமாக இருந்தால், அந்த நீண்ட கால அளவே பின்பற்றப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் வேலை தேடும் தகுதியானவர்களுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் எனத் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் சமர்ப்பிக்க வேண்டும்:

வெளிநாட்டு ஊழியருக்கு கிரீன் கார்டு ஸ்பான்சர் செய்ய விரும்பும் நிறுவனம், அந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பித்த அமெரிக்கத் தொழிலாளர்களை முறையாகப் பரிசீலிக்க வேண்டும்.

அவர்களில் யாரேனும் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் வேலைக்குத் தேவையான தகுதி மற்றும் பணித் தேவைகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

இதற்கான ஆவணங்கள் மற்றும் விளக்கங்களைத் தொழிலாளர் நலத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

மேலும், PERM நடைமுறைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், வழக்கமான பணியாளர் தேர்வு நடைமுறைகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பணிநீக்கம் செய்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு:

புதிய முன்மொழிவில் நிறுவனங்களுக்கான மற்றொரு முக்கியக் கட்டுப்பாடும் இடம்பெற்றுள்ளது.

ஒரு நிறுவனம், கிரீன் கார்டு சான்றிதழ் கோரும் அதே அல்லது அதற்கு ஒத்த பணிப் பிரிவில், குறிப்பிட்ட வேலைவாய்ப்புப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்குள் அமெரிக்கத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்திருந்தால், அந்தப் பணியிடத்துக்காக PERM விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியாது என முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், PERM விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தொடர்புடைய பணிப் பிரிவில் அமெரிக்கத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால், 5 வேலை நாள்களுக்குள் தொழிலாளர் நலத்துறைக்கும், I-140 விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் துறைக்கும் (USCIS) தகவல் தெரிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு அந்த வேலைவாய்ப்பை மீண்டும் வழங்குவது குறித்தும் நிறுவனம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகளுக்கு சலுகை ரத்தாகுமா?:

தற்போது அமெரிக்காவில் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பணிகளுக்கு ‘Schedule A’ என்ற சிறப்புச் சலுகை நடைமுறையில் உள்ளது.

இந்தச் சலுகையின்படி, அமெரிக்காவில் அந்தப் பணிகளுக்குத் தகுதியான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வழக்கமான PERM ஆட்சேர்ப்பு நடைமுறையைத் தவிர்த்து, நிறுவனங்கள் அடுத்தகட்ட குடியேற்ற விண்ணப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அதேபோல், அறிவியல், கலை மற்றும் நிகழ்த்துக் கலைத் துறைகளில் தனித்திறமை கொண்டவர்களுக்கும் Schedule A-வின் கீழ் தனிப்பட்ட நடைமுறை உள்ளது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றத்தின்படி, Schedule A சலுகையை நீக்கி, இந்தப் பிரிவினரையும் வழக்கமான தொழிலாளர் சந்தை மதிப்பீட்டு நடைமுறைக்குள் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் செவிலியர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளின் கிரீன் கார்டு நடைமுறைகளிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படலாம்.

இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?:

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் இந்தியர்கள் EB-2, EB-3 பிரிவுகளின் மூலம் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டைப் பெற முயற்சி செய்து வருகின்றனர்.

புதிய விதிகள் அமலுக்கு வந்தால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதற்கு முன்பு கூடுதல் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 90 நாள் விளம்பரம், அமெரிக்க விண்ணப்பதாரர்களை மதிப்பிடுதல், நிராகரிப்புக்கான காரணங்களை ஆவணப்படுத்துதல் போன்ற நடைமுறைகள் காரணமாக விண்ணப்பத் தயாரிப்பு மற்றும் பரிசீலனை காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஏற்கெனவே கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களின் எதிர்காலத்தில் இந்த மாற்றங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது இன்னும் இறுதி விதி அல்ல!:

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை வெளியிட்டிருப்பது புதிய விதிகளுக்கான முன்மொழிவு மட்டுமே. இது இன்னும் இறுதி விதியாக அறிவிக்கப்படவில்லை.

2026 நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ Federal Register-ல் வெளியிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவு தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 2027 ஜனவரி 19 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துகளைப் பரிசீலித்த பிறகு, தொழிலாளர் நலத்துறை இறுதி விதிகளை வெளியிடும். அதன்பிறகே இந்த மாற்றங்கள் எப்போது, எந்த நிபந்தனைகளுடன் நடைமுறைக்கு வரும் என்பது உறுதியாகும்.

எனவே, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த முன்மொழிவு, இறுதி விதியாக மாறும் வரை தற்போதைய நடைமுறைகளே தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டனைக் குறிவைக்கும் ஈரானின் 4,000 கி.மீ. ஏவுகணை: அமெரிக்காவை நடுங்க வைக்கும் அதிநவீன ஆயுதம்!

MUST READ