Homeசெய்திகள்உலகம்ரூ.17 கோடி சொத்துக்காக அண்ணனுடன் நீதிமன்றத்தில் போராடிய 3 இந்திய வம்சாவளி சகோதரிகள் வெற்றி!

ரூ.17 கோடி சொத்துக்காக அண்ணனுடன் நீதிமன்றத்தில் போராடிய 3 இந்திய வம்சாவளி சகோதரிகள் வெற்றி!

-

- Advertisement -

பிரிட்டனில் மறைந்த தந்தையின் சுமார் 16 லட்சம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 கோடி) மதிப்பிலான சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, தங்களது சகோதரருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மூன்று இந்திய வம்சாவளி சகோதரிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தந்தையின் இறுதி விருப்பத்தின்படி குடும்பச் சொத்துகளை நான்கு பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏரன் குரோவர்-ஜோன்ஸ், கிரண் கட்டரெல், கெல்லி பூரி ஆகிய மூன்று சகோதரிகளும் தங்களது சகோதரர் சோனி குரோவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

உயில் எழுதாமல் மறைந்த தந்தை:

ஹரி குரோவர் (85) என்பவர் கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் உயில் எதுவும் எழுதாமல் உயிரிழந்தார். அவருக்கு மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியில் வீடு மற்றும் இந்தியாவில் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள், நகைகள் உள்ளிட்ட சொத்துகள் இருந்தன.

தந்தையின் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பு மகன் சோனி குரோவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சொத்துகளின் மதிப்பு குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், தந்தையின் வங்கிச் சேமிப்பு மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட முக்கிய சொத்துகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் சகோதரிகள் குற்றம்சாட்டினர்.

ரூ.3 கோடிக்கும் அதிகமான வங்கிச் சேமிப்பு:

தந்தையின் வங்கிக் கணக்கில் சுமார் 3 லட்சம் பவுண்டு சேமிப்பு இருந்ததாக சகோதரிகள் தெரிவித்தனர். அந்தத் தொகை தனது பெயருக்கும் உரியது என்றும், தந்தை உயிருடன் இருந்தபோதே தன்னைக் கூட்டுக் கணக்குதாரராகச் சேர்த்திருந்தார் என்றும் சோனி வாதிட்டார்.

ஆனால், அந்தப் பணத்தில் மகன் பங்களித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி நிக்கோலஸ் பார்ஃபிட் தெரிவித்தார். மேலும், தந்தை தனது வங்கிக் கணக்குப் புத்தகத்தைத் தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இதையடுத்து, அந்த 3 லட்சம் பவுண்டு தந்தையின் சொத்துகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்றும், குடும்பத்தினருக்குப் பங்கிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவில் இருந்த தங்க நகைகள்:

இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் சுமார் 5 லட்சம் பவுண்டு மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பெட்டகத்தையும் அதிலிருந்த பொருள்களையும் 2017-ஆம் ஆண்டிலேயே தனக்குத் தந்தை பரிசாக அளித்துவிட்டதாக சோனி வாதிட்டார்.

ஆனால், தந்தை அந்தப் பெட்டகத்தின் பொறுப்பை மட்டுமே மகனிடம் ஒப்படைத்திருந்தார்; அதிலுள்ள அனைத்துப் பொருள்களையும் அவருக்குச் சொந்தமாக வழங்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும், தந்தை தனது இறுதிக்காலத்தில் மகள்களிடம், “கவலைப்படாதீர்கள்; உங்கள் சகோதரரை நம்பலாம். அவர் அனைத்தையும் சமமாகப் பகிர்ந்து கொடுப்பார்” என்று கூறியிருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ரூ.85 லட்சம் வழக்குச் செலவை ஏற்க உத்தரவு:

இந்த வழக்கில் சகோதரிகளின் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவர்களின் சட்டப் போராட்டத்துக்கான 80,000 பவுண்டு செலவை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம்) சோனி குரோவர் தனது சொத்துப் பங்கிலிருந்து செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் குடும்பத்தினருடன் இணைந்து சொத்துப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும், சகோதரிகளுக்குத் தெரிவிக்காமல் சொத்துகள் தொடர்பாகத் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

எனினும், சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து சோனி உடனடியாக நீக்கப்படவில்லை. குடும்பத்தினர் தங்களுக்குள் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள நீதிமன்றம் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.

தந்தையின் சொத்துகளைப் பங்கிடுவதில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, மூன்று சகோதரிகளின் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்றத் தீர்ப்பால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது.

சீனாவின் மின்சார விமானம் வெற்றிகரமாக சோதனைப் பறப்பு: 19 பேர் பயணிக்கலாம் – மணிக்கு 300 கி.மீ. வேகம்!

MUST READ