Homeசெய்திகள்உலகம்ஹசீனா நாடு கடத்தல் விவகாரம்: இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் எழுதிய வங்கதேசம்!

ஹசீனா நாடு கடத்தல் விவகாரம்: இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் எழுதிய வங்கதேசம்!

-

- Advertisement -

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷாமா ஒபைத் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

ஹசீனாவை ஏற்கெனவே உள்ள இந்தியா – வங்கதேசம் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா நிபந்தனை விதித்தா?:

வங்கதேசத்தில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது இந்தியாவில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பதற்கு முன்பாக இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

அதன்படி, ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்கில் புதிதாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தத் தகவல்கள் வங்கதேச அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் தொடர்பாக டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷாமா ஒபைத் இஸ்லாம், இந்தியா எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியா அத்தகைய நிபந்தனைகளை முன்வைத்ததாக வெளியான தகவல்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தின் சட்டம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை வங்கதேச சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – வங்கதேசம் இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால், அதன் அடிப்படையில் ஹசீனாவைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே வங்கதேச அரசின் நிலைப்பாடு என்று ஷாமா ஒபைத் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

ஹசீனா மீதான வழக்குகள் மற்றும் தண்டனை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வங்கதேச அரசு மேற்கொள்ளும் என்றும், அவரைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்தியாவின் பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேநேரத்தில், இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு என்பது ஹசீனா விவகாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் இருப்பதால் அவை தூதரக ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்கதேச சட்டத்துறை அமைச்சர் முகமது அஸாதுஸ்ஸமான், ஹசீனாவைத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான சட்ட நடைமுறைகளைத் தங்கள் நாடு நிறைவு செய்துவிட்டதாகவும், அடுத்தகட்ட முடிவை இந்தியாதான் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

வங்காளதேசம் திரும்பத் தயாராகும் ஷேக் ஹசீனா? புதிய பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பம் – டிசம்பரில் நாடு திரும்பத் திட்டம்!

இதற்கிடையே, ஹசீனா வங்கதேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவணங்களைப் பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் டிசம்பர் மாதத்தில் வங்கதேசம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹசீனாவை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா இதுவரை இறுதி முடிவை அறிவிக்காத சூழலில், வங்கதேசத்தின் கோரிக்கைக்கு இந்திய அரசு என்ன பதிலளிக்கப் போகிறது என்பது இரு நாடுகளின் உறவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

MUST READ