அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தொடர்ந்து 3-வது நாளாக விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரேடார் மற்றும் விமானிகளுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்புகளில் சீர்குலைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அமெரிக்காவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAA, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் விமானப் புறப்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியது. இந்தத் தடை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட மிக நீண்ட நாடு தழுவிய விமானப் புறப்பாடு நிறுத்தமாக இது அமைந்தது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியபோதிலும், விமானங்கள் மற்றும் பணியாளர்களின் கால அட்டவணையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அடுத்தடுத்த நாட்களிலும் பாதிப்பு நீடித்தது.
விமானக் கண்காணிப்புத் தளமான ‘பிளைட்அவேர்’ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 2,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 8,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் காரணமாகப் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம்!
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி கூறுகையில், பழமையான தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ரூட்டர்களை நவீனமயமாக்கும் பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கலே விமானப் போக்குவரத்துப் பாதிப்புக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தடங்கலுக்குப் பின்னால் சைபர் தாக்குதல் அல்லது திட்டமிட்ட சதி இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, விமானப் போக்குவரத்து அமைப்பை முழுமையாக நவீனமயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், விமான சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
