Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு: 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்; 4,700 விமானங்கள் ரத்து – 15...

அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு: 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்; 4,700 விமானங்கள் ரத்து – 15 லட்சம் பயணிகள் அவதி!

-

- Advertisement -

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும், சுமார் 4,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 15 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு

அமெரிக்கா முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதித்தது.

ஏற்கெனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறால் 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சுமார் 4,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் சுமார் 15 லட்சம் பயணிகளின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. சிலர் தங்களது பயணத்தைத் தவிர்த்து சாலை மார்க்கமாகச் செல்லத் தொடங்கினர்.

சைபர் தாக்குதல் காரணமல்ல

இந்தப் பாதிப்புக்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே விமானப் போக்குவரத்துப் பாதிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி கூறுகையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் பயன்படுத்தப்படும் சில சுவிட்சுகள் மற்றும் ரவுட்டர்கள் அதிகப்படியான தரவுகளால் பாதிக்கப்பட்டு, சீரற்ற தகவல்களை வழங்கியதாக விளக்கமளித்துள்ளார்.

விமானப் புறப்பாட்டுத் தடை நீக்கம்

இதற்கிடையே, விமானங்கள் புறப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தடை பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கினாலும், ரத்து செய்யப்பட்ட விமானங்கள், தாமதங்கள் மற்றும் விமானங்கள், பணியாளர்களை மீண்டும் சரியான இடங்களுக்கு மாற்ற வேண்டிய நிலை காரணமாக சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் விமானப் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் பழைய உள்கட்டமைப்புகள் குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மீது மோதிய சொகுசு சுற்றுலா கப்பல்! கவிழ்ந்து நீரில் மூழ்கியது – 130 பேர் பத்திரமாக மீட்பு!

MUST READ