ஆஸ்திரேலியாவில் சுற்றுலா சென்றபோது அடர்ந்த காட்டுப் பகுதியில் வழி தவறி சிக்கிய ஆட்டிசம் பாதிப்புள்ள 17 வயது இளைஞர், ஆறு நாட்களுக்குப் பிறகு மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், மெல்போர்ன் நகரில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வால்ஹல்லா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வில்லியம் என்ற 17 வயது இளைஞர், தனது நண்பருடன் அங்குள்ள காட்டுப் பகுதியில் முகாமிட்டிருந்தார்.
கடந்த நவம்பர் 6-ஆம் தேதி முகாமில் இருந்து வெளியே சென்ற வில்லியம், மீண்டும் திரும்பும்போது வந்த பாதையை மறந்து காட்டுக்குள் வழி தவறினார். அப்போது அவரிடம் கைபேசி, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லை.
தீவிர தேடுதல் வேட்டை
வில்லியம் முகாமுக்குத் திரும்பாததால் அவரைத் தேடும் பணி தொடங்கியது. 80-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், மோப்ப நாய்கள் மற்றும் ஹெலிகாப்டர் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆறு நாட்களாகத் தேடுதல் பணி நீடித்தது.
இதற்கிடையே காட்டில் தனியாகச் சிக்கியிருந்த வில்லியம், உயிர் பிழைப்பதற்காக அருகிலிருந்த ஓடையில் கிடைத்த தண்ணீரைக் குடித்துள்ளார். தன்னிடம் இருந்த உருளைக்கிழங்கு சிப்ஸைச் சிறிது சிறிதாகச் சாப்பிட்டு நாட்களைக் கடத்தியுள்ளார். இரவு நேரக் குளிரில் இருந்து தப்பிக்கத் துணிகளையும் பயன்படுத்தியுள்ளார்.
ஹெலிகாப்டரில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர்
ஆறு நாட்களுக்குப் பிறகு, காட்டுப் பகுதியில் ஓடையின் அருகே இருந்த பாறை ஒன்றின் மீது வில்லியம் படுத்திருந்ததைப் போலீஸ் ஹெலிகாப்டர் குழுவினர் கண்டுபிடித்தனர். ஹெலிகாப்டரைப் பார்த்ததும் அவர் கையை அசைத்து மீட்புக் குழுவினருக்கு சமிக்ஞை காட்டினார்.
இதையடுத்து அவரை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். வெயிலால் உடலில் சூரியக்காயம் மற்றும் சில காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் நல்ல மனநிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மருத்துவக் கண்காணிப்புக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மகனை மீட்டுக் கொடுத்த குழுவினருக்கு தாய் நன்றி
மகன் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்த அவரது தாயார் எலிசபெத் பார்க்லி பெரும் நிம்மதி அடைந்தார். ஆறு நாட்களாகத் தனது மகனைத் தேடி, இறுதியில் பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஆறு நாட்கள் அடர்ந்த காட்டில் தனியாகச் சிக்கியிருந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமீரகத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து – இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு!
