ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜேரா பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


புஜேராவில் உள்ள ஷேக் கலீபா பின் ஜாயித் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது. தொடர்ந்து கவிழ்ந்த லாரி, போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த மற்றும் நின்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தில் லாரியின் டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்ததாகவும், அந்தத் தீ அடுத்தடுத்து மோதிய வாகனங்களுக்கும் பரவி பெரும் விபத்தாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 பேர் காயம் – 15 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்
இந்த விபத்தில் மொத்தம் 30 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்தியர்களும் உயிரிழப்பு
இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிலரின் அடையாளங்களை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கவும், அமீரக அதிகாரிகளுடன் இணைந்து செயல்படவும் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த கோர விபத்து அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய உறவு, சீன உளவு சர்ச்சை எதிரொலி: என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் திடீர் ராஜினாமா!
