பாரசீக வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் மீது மர்மப் பொருள் ஒன்று தாக்கியதில், இந்திய மாலுமி ஒருவர் காயமடைந்துள்ளார். கப்பலில் இருந்த மற்ற 5 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்..


எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
MT FUJAIRAH ENERGY என்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் (VLCC), கடந்த நவம்பர் 10-ஆம் தேதி அல் ருவைஸ் பகுதியில் இருந்து துபாய் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் மீது ஏவுகணை அல்லது வேறு ஏவப்பட்ட பொருள் போன்ற ஒன்று தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் இந்தியர் ஒருவரும் அடங்குவார்.
இந்திய மாலுமிக்கு சிறிய காயம்
காயமடைந்த இந்திய மாலுமிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். அவர் கப்பலில் இருந்து பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தக் கப்பலில் மொத்தம் 24 பேர் பணியாற்றியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்தியர்கள். காயமடைந்த இந்தியரைத் தவிர, மற்ற 5 இந்திய மாலுமிகள் உட்பட எஞ்சிய 18 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பு
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கப்பலில் உள்ள மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை உறுதி செய்வதற்காக இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
கப்பல் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், மாலுமிகளின் பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் நலனை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலில், வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி வருவது சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல் தாக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
