Homeசெய்திகள்உலகம்கழிவுநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த ரூ.99 கோடி தங்கக் கட்டிகள்! பெல்ஜியத்தில் தொழிலாளர்களுக்கு...

கழிவுநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த ரூ.99 கோடி தங்கக் கட்டிகள்! பெல்ஜியத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

-

- Advertisement -

பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, சுமார் ரூ.99 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 18 வயது மாணவர் இந்தப் புதையலைக் கண்டுபிடித்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

we-r-hiring

பள்ளம் தோண்டியபோது கிடைத்த தங்கப் புதையல்

பெல்ஜியத்தின் டெண்டர்மோண்டே (Dendermonde) நகரில் உள்ள பழைய மதுபான உற்பத்தி நிலையம் அமைந்திருந்த பகுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கழிவுநீர் குழாய்களைப் பதிப்பதற்காக தொழிலாளர்கள் நிலத்தைத் தோண்டியுள்ளனர்.

அப்போது கட்டிடத்தின் அடித்தளப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தங்க நாணயங்களைப் பார்த்த தொழிலாளர்கள், அவை சாதாரண நாணயங்கள் என்று நினைத்துள்ளனர். பின்னர் தங்கக் கட்டிகளையும் கண்டபோதுதான் அதன் மதிப்பு அவர்களுக்குத் தெரியவந்தது.

49 தங்கக் கட்டிகள் – கோடிக்கணக்கான மதிப்பு

இந்தப் புதையலில் தலா ஒரு கிலோ எடையுள்ள 49 தங்கக் கட்டிகள், ஏராளமான தங்க நாணயங்கள் மற்றும் தங்கத் துண்டுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 90 லட்சம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.99 கோடியாகும்.

இந்தப் புதையல் ஒரு பையில் வைக்கப்பட்டு, பழைய கட்டிடத்தின் அடித்தளச் சுவருக்குள் செங்கற்களால் மூடப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டிடம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுபான உற்பத்தி நிலைய உரிமையாளர் தியோபிலஸ் வான் அஸ்சே என்பவருக்காகக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதையலின் உரிமையாளர் யார்?

தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழிலாளர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தைப் பாதுகாப்பாகக் கைப்பற்றி, பிரஸ்ஸல்ஸில் உள்ள உயர் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளனர்.

இந்தத் தங்கம் எங்கிருந்து வந்தது, அது யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய கட்டிடத்தின் உரிமையாளரான வான் அஸ்சே குடும்பத்தின் வாரிசுகள், கட்டுமான நிறுவனம் மற்றும் அந்தக் கட்டிடத்தைப் புதுப்பிக்கும் சமூகநல அமைப்பு ஆகியோர் உரிமை கோர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெல்ஜிய சட்டப்படி, புதையலின் உண்மையான உரிமையாளர் முன்வந்து உரிமை கோருவதற்காக குறைந்தது ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதுவரை தங்கத்தின் உரிமை தொடர்பான விசாரணை தொடரும்.

புதையலைக் கண்டுபிடித்த மாணவருக்கு பரிசு கிடைக்குமா?

கோபே (Kobe) என்ற 18 வயது மாணவர்தான் முதலில் இந்தப் புதையலைக் கண்டுபிடித்துள்ளார். அவர் தனது சக தொழிலாளர்களுடன் சேர்ந்து தங்கத்தைக் கண்டதும் உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இவ்வளவு பெரிய புதையலைக் கண்டுபிடித்ததால், தங்களுக்குக் கண்டுபிடிப்பாளர் வெகுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாகக் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் பெல்ஜியத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

MUST READ