பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், கண் பாதிப்புக்கான சிகிச்சைக்காக சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண் பாதிப்புக்கான ஊசி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


74 வயதான இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி இரவு முதல் 11-ம் தேதி அதிகாலை வரை அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (PIMS) அழைத்துச் செல்லப்பட்டார்.
கண்ணுக்கு சிறப்பு ஊசி சிகிச்சை
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, கண் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இம்ரான் கானுக்கு கண் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு ‘இன்ட்ராவிட்ரியல் ஆன்டி-VEGF’ (Intravitreal Anti-VEGF) என்ற ஊசி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு முன்னதாக அவரது உடல்நிலை மற்றும் கண்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய உடல் அளவீடுகள் இயல்பான நிலையில் இருந்ததாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு முன்னும், சிகிச்சையின்போதும், பின்னரும் அவர் சீரான உடல்நிலையிலேயே இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நவம்பர் 11-ம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடல்நிலை குறித்து PTI கவலை
இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையின் வெளிப்படைத்தன்மை குறித்து PTI கட்சி கவலை தெரிவித்துள்ளது. அவரது உடல்நலம் அரசியல் பேரம் பேசுவதற்கான கருவியாக இருக்கக்கூடாது என்றும், அவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், அவரது குடும்பத்தினர், தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சட்டக் குழுவினர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பான சர்ச்சை
இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அவரை அரசு மருத்துவமனையான PIMS-க்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பியதாக அப்போது சர்ச்சை எழுந்தது.
தற்போதைய சிகிச்சை நடவடிக்கையும் அவரது மருத்துவப் பராமரிப்பு தொடர்பான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராகப் பதவி வகித்த இம்ரான் கான், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவர் தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது.
