செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடும் என்றும், இதனால் மனிதகுலத்திற்குப் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரித்துள்ளார்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை எளிதாக்கி வரும் நிலையில், அதன் அதிவேக வளர்ச்சி பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் கட்டுப்பாட்டை மீறுமா ஏ.ஐ.?
கனடாவில் நடைபெற்ற ‘தி ஹிண்டன் லெக்சர்ஸ் 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பால் கிறிஸ்டியானோ, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து தனது கவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஏ.ஐ. மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள்ளேயே இதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.
ஏ.ஐ. மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது என்பது, உலகில் என்ன நடக்க வேண்டும் என்பதை மனிதர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு அமைப்புகளே தீர்மானிக்கும் நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.
மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுமா?
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தில் மனிதர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாகக்கூடும் என்றும் பால் கிறிஸ்டியானோ எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில், அடுத்த சில ஆண்டுகளில் ஏ.ஐ. கட்டுப்பாட்டை மீறும் என்ற தனது கணிப்புகள் உறுதியான அறிவியல் முடிவுகள் அல்ல என்றும், அவை தனது தனிப்பட்ட மதிப்பீடுகள் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏ.ஐ. வளர்ச்சிக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அவசியம்
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கும் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாகத் தொடர வேண்டுமெனில், அதன் வளர்ச்சியுடன் பாதுகாப்பு நடைமுறைகளும் இணைந்து முன்னேற வேண்டும் என்பதே இந்த எச்சரிக்கையின் முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.
