தாய்லாந்தின் புகெட் தீவில் உள்ள வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் புகெட் தீவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான படோங் பகுதியில், பாங் முயாங் சாய் கோர் சாலையில் வாகன வாடகை மற்றும் விற்பனை நிறுவனம் இயங்கி வந்த வணிகக் கட்டிடத்தில் இன்று (நவம்பர் 16) அதிகாலை சுமார் 3.17 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தில் ஏற்பட்ட தீ மளமளவெனப் பரவி அருகிலிருந்த கட்டிடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களால் தீ வேகமாகப் பரவியது!
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் தரைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் இருந்த எரிபொருள், ரப்பர் டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தில் இருந்தவர்கள் தீயிலிருந்து தப்பிக்க மேல்தளங்களுக்குச் செல்ல முயன்றனர். ஆனால், அடர்ந்த புகை காரணமாக வெளியேற முடியாமல் பலர் சிக்கிக்கொண்டனர். தீயணைப்புப் படையினர் கட்டிடத்திற்குள் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 36 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மின்கசிவால் தீ விபத்தா? விசாரணை தீவிரம்!
முதற்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் அருகே இருந்த மின்கம்பம் அல்லது மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் ஐந்து வணிகப் பிரிவுகள் சேதமடைந்துள்ளதாகவும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்களும் தீயில் சேதமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகெட் தீவின் முக்கிய சுற்றுலாப் பகுதியான படோங்கில் நடைபெற்ற இந்தத் தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை அல்லது காயமடையவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
நியூயார்க்கில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி – 17 பேர் காயம்!
