2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) புதிய போட்டி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ‘சூப்பர் 7’ என்ற புதிய சுற்று முக்கிய கட்டமாக இடம்பெறுகிறது.


தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2027 உலகக் கோப்பை அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி நவம்பர் 21-ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. மொத்தம் 12 மைதானங்களில் 57 போட்டிகள் நடைபெற உள்ளன.
முதற்கட்டமாக, தகுதிச் சுற்றில் 2, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சீரிஸ்’ சுற்றில் விளையாடும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த கட்டமான குரூப் சுற்றுக்கு முன்னேறும்.
அதன்பின்னர் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், இரு குழுக்களிலும் சிறந்த 4-வது இடத்தைப் பெறும் அணி என மொத்தம் 7 அணிகள் ‘சூப்பர் 7’ சுற்றுக்கு தகுதி பெறும்.
‘சூப்பர் 7’ சுற்றில் 7 அணிகளும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோதும். இதனால் இந்தச் சுற்றில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும். குரூப் சுற்றில் பெற்ற புள்ளிகள் சூப்பர் 7 சுற்றுக்கு எடுத்துச் செல்லப்படாது.
சூப்பர் 7 புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் இடம் பெறும் அணி 4-வது இடம் பெறும் அணியுடனும், 2-வது இடம் பெறும் அணி 3-வது இடம் பெறும் அணியுடனும் அரையிறுதியில் மோதும். அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டியில் உலகக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும்.
இந்த புதிய வடிவமைப்பின்படி இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் குரூப் A-வில் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது குரூப் சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 7-ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
மொத்தத்தில் 14 அணிகள், 57 போட்டிகள் மற்றும் புதிய ‘சூப்பர் 7’ சுற்றுடன் 2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி வடிவமைப்பு அமைந்துள்ளது. இந்த மாற்றம் உலகக் கோப்பை தொடருக்கு புதிய போட்டி கட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
