17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி, மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2027-ம் ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.


மலேசியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்தியா!
ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றின் ‘இ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தனது கடைசி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டத்தின் இரு பாதிகளிலும் கோல்கள் அடித்து ஆதிக்கம் செலுத்தினர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
கோல் அடித்த வீராங்கனைகள் யார்?
இந்திய அணியின் ரெடிமா தேவி சிங்ஹாமாயும் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இரண்டாவது பாதியில் பிரிதிகா பர்மன் 51-வது நிமிடத்திலும், அனுஷ்கா குமாரி 56-வது நிமிடத்திலும் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை அதிகரித்தனர்.
ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நிதி 87-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பைக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி!
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட மகளிர் அணி, தொடர்ந்து இரண்டு முறை ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும், எந்த வயதுப் பிரிவிலும் தொடர்ந்து இரண்டு மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய அணியாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தகுதிச் சுற்றில் தோல்வியே இல்லாத பயணம்
இந்தியா தகுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஈராக்கை 14-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் சிரியாவை 2-0 என வென்றது. தற்போது மலேசியாவையும் 4-0 என வீழ்த்தி, மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மொத்தம் 9 புள்ளிகளுடன் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணி மொத்தம் 20 கோல்களை அடித்ததுடன், எதிரணிகளிடம் இருந்து ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்கவில்லை. 2027-ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை! சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா!
