Homeசெய்திகள்இந்தியாதேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம்: திமுகவின் 22 எம்.பி.க்கள் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம்: திமுகவின் 22 எம்.பி.க்கள் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி!

-

- Advertisement -

இந்தியா கூட்டணி கட்சியினர் உச்சநீதிமன்றம் நோக்கிப் பேரணி நடத்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் மீது வழக்குத் தொடுக்க வலியுறுத்திப் போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்றது தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தடைகள் விதிக்கப்பட்டதால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

we-r-hiring

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, எம்.ஏ. பேபி, டி. ராஜா, திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை பாஜகவைப் பாசிசக் கட்சி என்று விமர்சித்து வந்த திமுகவைச் சேர்ந்த எவரும் இந்தப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திமுகவிலிருந்து ஒருவர் கூட பங்கேற்காதது ஏன் என்பதுதான் திமுக தலைமைக்கு முன்வைக்கப்படும் முக்கியக் கேள்வி.

தொடர் போராட்டங்களிலும் பங்கேற்காதது ஏன்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கக் கோரியும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 6-ஆம் தேதி நாடாளுமன்றத்திலிருந்து பேரணி, அக்டோபர் 7-ஆம் தேதி ஜன்பத் முதல் ஜந்தர் மந்தர் வரை பேரணி, அக்டோபர் 8-ஆம் தேதி ராஜ்காட்டில் சத்தியாகிரகப் போராட்டம், அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் மற்றும் குடியரசுத் தலைவருடனான சந்திப்பு, அக்டோபர் 10-ஆம் தேதி சிஜேபி அமைப்பின் போராட்டம், அக்டோபர் 11-ஆம் தேதி இடதுசாரி அமைப்புகளின் போராட்டம் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நோக்கிப் பேரணியும் போராட்டமும் நடைபெற்றுள்ளன. இத்தனை நிகழ்வுகள் நடந்தும் நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் பங்கேற்கவில்லை என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக தடம் மாறுகிறதா?

பாஜக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதை எதிர்த்தால் பல்வேறு வழிகளில் பிரச்சினைகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக திமுக தனது அரசியல் நிலைப்பாட்டில் தடம் மாறுகிறதா? வகுப்புவாத எதிர்ப்பைக் கைவிட்டு விட்டதா? நேற்று வரை பாஜகவைப் பாசிச, மக்கள் விரோதக் கட்சி என்று முழங்கிய திமுகவினர் இன்று மௌனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பினால் தரக்குறைவாக எழுதித் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது முறையா என்றும் திமுக தலைமையை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி, அமித்ஷாவை உண்மையாக எதிர்க்கிறீர்களா?

காங்கிரஸ் கட்சியின் கேள்வி மிகவும் எளிமையானது. நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள்? மோடியையும் அமித்ஷாவையும் எதிர்த்துப் போராடுவதாகத் தொடர்ந்து கூறுகிறீர்கள். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுந்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கிப் போராடும் போது திமுகவின் போராட்டம் எங்கே?

முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் தனது உரையின் முடிவில் சனாதனம் ஒழிக என்று முழங்கினார். அடுத்த கூட்டத்தொடரில் அந்த முழக்கம் காணாமல் போனது ஏன்? சட்டமன்றத்தில் முழக்கம், பின்னர் அமைதி, வீதியில் மௌனம், முரசொலியில் தனிநபர் தாக்குதல் என்பதுதான் திமுகவின் கலாச்சாரமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடியையும் அமித்ஷாவையும் திமுக உண்மையிலேயே எதிர்க்கிறது என்றால், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்களில் திமுகவின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருக்க வேண்டாமா? மோடி, அமித்ஷாவுடன் திமுகவுக்கு என்ன அரசியல் புரிதல் இருக்கிறது? அதை விளக்க ஏன் தயங்குகிறது? திரைமறைவில் ஏதேனும் ரகசிய உடன்பாடு இருக்கிறதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்றும் மாணிக்கம் தாகூர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

திமுக தலைமை விளக்கமளிக்க வேண்டும்!

இந்தியாவிலேயே பாஜக நுழைய முடியாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றியதாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உரத்த குரலில் முழங்கிய திமுக, தற்போது பாஜகவுக்கு வெண்சாமரம் வீசத் தயாராகிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் திமுக நடத்தும் தனிநபர் தாக்குதல்கள் பதிலாகிவிட முடியாது. திமுகவின் மௌனம் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், இதுகுறித்து திமுக தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் திமுக தலைமை உரிய விளக்கமளித்து செயல்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்

டெல்லி போராட்டத்தால் வர்த்தகர்களுக்கு ரூ.2,000 கோடி இழப்பு! பண்டிகை கால விற்பனை கடும் பாதிப்பு!

MUST READ