Homeசெய்திகள்கட்டுரை“என் மீது தவறான அவதூறு!” – எஸ்.பி. அலுவலகத்தில் விக்னேஷ் புகார்: நில மோசடி குற்றச்சாட்டுகள்...

“என் மீது தவறான அவதூறு!” – எஸ்.பி. அலுவலகத்தில் விக்னேஷ் புகார்: நில மோசடி குற்றச்சாட்டுகள் பொய் என விளக்கம்!

-

- Advertisement -

தன் மீது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் நில மோசடி குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரிவித்து, அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

we-r-hiring

தனது புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றி, தவறான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

50-க்கும் மேற்பட்டோரின் நிலங்களை மோசடி செய்ததாகப் பரவிய தகவல்!

கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்கள் மற்றும் சில செய்தித் தளங்களில், விக்னேஷ் என்பவர் 50-க்கும் மேற்பட்ட நபர்களின் நிலங்களைப் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாகப் பதிவு செய்து ஏமாற்றியதாகத் தகவல்கள் பரவி வந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள விக்னேஷ், சம்பந்தப்பட்ட சொத்து தங்களது குடும்பச் சொத்து என்றும், அதன் உரிமை தொடர்பாக நீண்டகாலமாகச் சட்டப்பூர்வமாக வழக்கு நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“20 ஆண்டுகளாகச் சட்டப்பூர்வமாக வழக்கு நடத்தினோம்!”

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் கூறியதாவது:

“என் மீது பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை; உள்நோக்கம் கொண்டவை. இந்தச் சொத்து எங்களுடைய குடும்பச் சொத்து. 2006-ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக வழக்கு நடத்தி வருகிறோம்.

கோவை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்புகளைப் பெற்ற பிறகே இந்தச் சொத்துக்கான உரிமையைப் பெற்றுள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பு நகலைப் பதிவு செய்து, சட்டப்பூர்வமாகவே நிலத்தைப் பராமரித்து வருகிறோம்” என்று அவர் விளக்கமளித்தார்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதாகக் குற்றச்சாட்டு!

தொடர்ந்து பேசிய அவர், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது புகைப்படம் திருத்தப்பட்டு, தவறான தகவல்களுடன் உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களிடம் சொத்து தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்கள் அனைத்தும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இதில் ஏதேனும் தவறு இருந்தாலோ, யாரையாவது ஏமாற்றியிருந்தாலோ சட்டப்படி எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் விக்னேஷ் கூறினார்.

எஸ்.பி. அலுவலகம், சைபர் கிரைம் பிரிவில் புகார்!

இந்த விவகாரம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் நபர்கள் மீதும், AI தொழில்நுட்பம் மூலம் திருத்தப்பட்ட புகைப்படங்களை உருவாக்கிப் பகிர்ந்ததாகக் கூறப்படும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் இணையவழிக் குற்றப்பிரிவில் (சைபர் கிரைம்) புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்னேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார்! தவெக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – கணபதி அலுவலகத்தில் முற்றுகை

MUST READ