ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, முதல்முறையாக பாகிஸ்தானின் மூத்த அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நவம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் நாகரிகப் பேச்சுவார்த்தை மன்றத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு
பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கு (Aurangzeb Khan Khichi) இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. SCO அமைப்பில் இடம்பெற்றுள்ள 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முக்கிய நகர்வு
2025-ஆம் ஆண்டு மே மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. கடைசியாக 2023-ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார்.
கலாசார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம்
SCO உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாசாரப் பரிமாற்றம், வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற SCO அரசுத் தலைவர்கள் கூட்டத்தில், இந்தியா இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இருதரப்பு உறவில் மாற்றமா?
SCO போன்ற பலதரப்பு அமைப்புகளின் கூட்டங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன. இருப்பினும், இந்த அழைப்பை மட்டும் வைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருத முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் அழைப்பை பாகிஸ்தான் ஏற்குமா, அதன் சார்பில் அமைச்சர் டெல்லிக்கு வருவாரா என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர் சங்கத் தேர்தல்: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அனுமதி!
