உலகிலேயே அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஒரு குட்டி நாட்டில் வேலைக்குச் சென்றால், மாதம் எட்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிறிய நிலப்பரப்பைக் கொண்ட அந்த நாடு, பொருளாதார வளத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


ஐரோப்பாவில் ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நாட்டின் பெயர் லிச்செஸ்டின் (Liechtenstein). பெயரை உச்சரிப்பதே சற்றுக் கடினம்தான். இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு சுமார் 160 சதுர கிலோமீட்டர். அதாவது, சுமார் 16 கிலோமீட்டர் நீளமும் 10 கிலோமீட்டர் அகலமும் கொண்ட சிறிய நாடு.
நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 42 ஆயிரம். தலைநகர் வடூஸில் (Vaduz) வசிப்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. உலகின் மக்கள் தொகை குறைந்த நாடுகளில் ஒன்றாக லிச்செஸ்டின் விளங்குகிறது.
அதிக வருமானத்துக்கான காரணம் என்ன?
இந்த நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) இந்திய ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு சுமார் 96 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை மாதக் கணக்கில் பிரித்துப் பார்த்தால் சுமார் எட்டு லட்சம் ரூபாய் வருகிறது. ஆனால், இது ஒவ்வொரு குடிமகனும் மாதந்தோறும் பெறும் சம்பளம் என்று பொருள் கொள்ளக் கூடாது. நாட்டின் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுத்துக் கணக்கிடப்படும் அளவீடுதான் இது.
லிச்செஸ்டினின் அதிக வருமானத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது அதன் தொழில்துறை. பெரிய இயந்திரங்களைத் தயாரிப்பதைவிட, அதிக மதிப்புள்ள துல்லியமான தொழில்நுட்பப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட சிறப்புத் தயாரிப்புகளில் இந்த நாடு கவனம் செலுத்துகிறது.
மற்றொரு முக்கியக் காரணம் அதன் நிதி மற்றும் வங்கித் துறை. நாட்டில் வங்கிச் சேவைகளும் நிதி நிறுவனங்களும் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்ய முடியாத சிலர், லிச்செஸ்டினில் உள்ள நிதி நிறுவனங்களை நாடுவதாகவும் கூறப்படுகிறது.
ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனால் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு லிச்செஸ்டின் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஆட்கள் இல்லாத ஓட்டல், குறைந்த பணியாளர்களுடன் கடைகள்!
மாதம் எட்டு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்தால், ஓட்டல் போன்ற சேவைத் துறைகளில் குறைந்த சம்பள வேலைகளுக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி எழலாம்.
வடூஸ் நகரத்தில் ஒரு இரவு தங்குவதற்காக ஓட்டல் ஒன்றில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தோம். அங்கு சென்றடைந்தபோது இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது. கடும் குளிரும் நிலவியது. ஓட்டலைக் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம்.
அந்த நேரத்தில் ஓட்டலில் பணியாளர்கள் யாரும் இல்லை. வரவேற்பறையில் இருந்த கணினி வழியாகச் செக்-இன் செய்த பிறகு, அறைக்கான சாவி அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. காலையில் புறப்படும்போதும் பணியாளர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. காலை உணவு வழங்கும் உணவகத்தில் மட்டும் இரண்டு பெண்கள் பணியில் இருந்தனர்.
நாட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். லிச்செஸ்டினின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கோட்டையைப் பார்வையிட்டோம். அங்கும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் சென்றபோது, அங்கு மொத்தமே மூன்று பணியாளர்கள்தான் இருந்தனர். இந்தியாவில் இதுபோன்ற கடைகளில் பலர் பணியாற்றுவதைப் பார்க்க முடியும்.
மக்கள் தொகை குறைவாக இருப்பதால், வீடுகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. நகரங்களிலும் சாலைகளிலும் நெரிசல் குறைவாக இருப்பதைப் பார்க்க முடிந்தது.
அமைதியான வாழ்க்கை, குறைந்த குற்றச்செயல்கள்!
சிறிய நிலப்பரப்பும் குறைந்த மக்கள் தொகையும் கொண்ட லிச்செஸ்டினில் தட்பவெப்ப நிலையும் இதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. வாகனப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் சில பகுதிகளில் காற்று மாசும் குறைவாக இருக்கலாம்.
வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்கள் அரிதாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. கொலை போன்ற கடுமையான குற்றங்களும் மிகவும் அரிது எனச் சொல்லப்படுகிறது. குறைந்த குற்றச்செயல்கள் காரணமாகச் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில், நிதி மற்றும் வங்கித் துறையுடன் தொடர்புடைய மோசடிகள் போன்ற சவால்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன.
“பெரிய கல்லு சின்ன லாபம்; சின்ன கல்லு பெரிய லாபம்!”
பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கிரானைட் கல் வியாபாரம் செய்பவர், வைரம் விற்பவரைப் பார்த்து, “பெரிய கல்லு சின்ன லாபம்; சின்ன கல்லு பெரிய லாபம்” என்று கூறும் வசனம் நினைவுக்கு வருகிறது.
இந்தியாவையும் லிச்செஸ்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது. மிகக் குறைந்த நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்டிருந்தாலும், தொழில்துறை, நிதிச் சேவைகள் மற்றும் ஆராய்ச்சியின் மூலம் பொருளாதார வளத்தை உருவாக்கியுள்ள இந்தச் சிறிய நாடு வியப்பை ஏற்படுத்துகிறது.
