உலகம் முழுவதும் வீடியோ கேம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) கேம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வணிகச் சாதனையைப் படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கேமின் டிஜிட்டல் முன்பதிவு விற்பனை மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் (Sensor Tower) மதிப்பிட்டுள்ளது.


10.3 மில்லியன் பிரதிகள் முன்பதிவு!
சென்சார் டவர் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, GTA 6 கேம் இதுவரை சுமார் 10.31 மில்லியன் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முன்பதிவு வருவாய் 1 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.
இந்த எண்ணிக்கை ராக்ஸ்டார் கேம்ஸ் அல்லது அதன் தாய் நிறுவனமான டேக்-டூ இன்டராக்டிவ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட விற்பனைத் தரவு அல்ல. இது சந்தை ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.
பிளேஸ்டேஷனில் அதிக முன்பதிவு
இந்த கேமின் முன்பதிவில் பிளேஸ்டேஷன் 5 (PS5) அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- பிளேஸ்டேஷன் 5: சுமார் 75 சதவீதம்
- எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X|S: சுமார் 25 சதவீதம்
இதன்படி, பிளேஸ்டேஷன் தளத்தில் மட்டும் சுமார் 7.7 மில்லியன் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பாக்ஸ் தளத்தில் சுமார் 2.6 மில்லியன் பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 19-ல் வெளியாகிறது GTA 6
ராக்ஸ்டார் கேம்ஸ் தயாரித்துள்ள GTA 6, வரும் நவம்பர் 19-ஆம் தேதி பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X|S தளங்களில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கேமில் லியோனிடா என்ற கற்பனை மாகாணம் இடம்பெறுகிறது. இது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. லூசியா மற்றும் ஜேசன் என்ற இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
GTA 5 சாதனையை முறியடிக்குமா?
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான GTA 5, முதல் 24 மணி நேரத்தில் 800 மில்லியன் டாலருக்கும் அதிகமான விற்பனையைப் பதிவு செய்தது. வெளியான மூன்று நாட்களிலேயே 1 பில்லியன் டாலர் வருவாயைக் கடந்தது.
தற்போது GTA 6 வெளியீட்டுக்கு முன்பே 1 பில்லியன் டாலர் முன்பதிவு வருவாயை எட்டியுள்ளதாக வெளியாகியுள்ள மதிப்பீடுகள், கேமிங் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெளியீட்டுக்குப் பிறகு இந்த கேம் எத்தகைய விற்பனைச் சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் கேமிங் துறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
99 நாடுகளில் ஐபோன் பயனர்களுக்கு ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கை! ஆப்பிள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
