Homeசெய்திகள்இந்தியாஅமெரிக்காவுக்கு 5 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்: 6 பேர் கைது!

அமெரிக்காவுக்கு 5 லட்சம் போதை மாத்திரைகள் கடத்தல்: 6 பேர் கைது!

-

- Advertisement -

அமெரிக்காவுக்கு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அஞ்சல் சேவைகள் வாயிலாகப் போதை மாத்திரைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேரை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

‘ஆப்பரேஷன் மான்சூன் தண்டர்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், ஒரு பெண் உட்பட 6 பேர் சிக்கியுள்ளனர்.

இந்தியாவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், அமெரிக்காவுக்கு போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள்களை இணையதளங்கள், சமூக வலைதளங்கள், அஞ்சல் மற்றும் விநியோக நிறுவனங்கள் மூலம் அனுப்பி விற்பனை செய்து வருவதாக இந்தியா மற்றும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இரு நாட்டு அமைப்புகளும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கின. சர்வதேச அளவில் செயல்பட்டு வந்த இந்தக் கும்பலைக் கண்டறிந்து கைது செய்வதற்காக ‘ஆப்பரேஷன் மான்சூன் தண்டர்’ என்ற பெயரில் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இரு நாட்டு அமைப்புகளும் பகிர்ந்து கொண்ட ரகசியத் தகவல்களின் அடிப்படையில், கடந்த 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத், டெல்லி, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா மற்றும் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ ஆகிய நகரங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தச் சோதனைகளில் ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். லக்னோவைச் சேர்ந்த தேஜ் தீபக் ஜெய்ஸ்வால், ஆர்த்தி சோனி, தீபக் குமார் திவாரி, ஜஸ்வந்த் ஆகியோரும், ஐதராபாத்தைச் சேர்ந்த தலபத்துலா மனோஜ், கொல்கத்தாவைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது, அமெரிக்காவுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவற்றில் இரண்டு சரக்குகளை அமெரிக்க அதிகாரிகள் அந்நாட்டில் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்தக் கும்பல் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை சுமார் 3,000 பார்சல்களில் ஐந்து லட்சம் போதை மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியிருப்பதும், இதுவரை ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், டெலிகிராம், ஸ்கைப், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து போதை மாத்திரைகளுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளனர்.

பின்னர், அந்த மாத்திரைகளை அமெரிக்காவில் செயல்பட்டு வந்த கடத்தல் குழுவினருக்கு அஞ்சல் மற்றும் பிற விநியோகச் சேவைகள் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்குள்ள குழுவினர் அவற்றை வாடிக்கையாளர்களிடம் விநியோகித்துள்ளனர்.

இந்தக் கும்பலுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களின் விவரங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பணப் பரிவர்த்தனை விவரங்கள், ஏற்கெனவே அனுப்பப்பட்ட பார்சல்களின் தகவல்கள், முகவரிகள், அமெரிக்க அஞ்சல் சேவையின் கண்காணிப்பு எண்கள் மற்றும் அனுப்பப்பட்ட போதை மாத்திரைகளின் வகைகள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பார்சல்களைப் பெற்று விநியோகிக்கும் நபர்களைக் கண்டறிய முடியும்.

இந்தியா – அமெரிக்கா இடையிலான போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பின் மூலம் இணையதளங்கள் மற்றும் அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தி நடைபெறும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை! நகைக்கடையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ் – 4 பேர் பிடிபட்டனர்!

 

 

MUST READ