
வெள்ளை மாளிகையின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான கரோலின் லீவிட்டிற்குப் பதிலாகப் புதியவரை நியமிப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், அவர்தனது பச்சிளம் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பைச் சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பேசுகையில், செய்தித் தொடர்பாளர் பணியில் கரோலின் லீவிட் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அவரது இடத்தை நிரப்புவது சவாலாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். “கரோலின் அற்புதமாகச் செயல்பட்டார்; அவர் ஒரு பிரச்சினை, பெரிய பிரச்சினை. அதை நான் அவரிடமே சொல்லிவிட்டேன்” என்று டிரம்ப் கூறினார். அவரது பேச்சாற்றலைப் பாராட்டிய டிரம்ப், “அவர் என்னை விடக் குழந்தையை அதிகம் நேசிக்கிறார்; இது மோசமானதுதான் என்றாலும், அவர் நன்றாக இருக்கிறார்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். மேலும், ‘ஃபாக்ஸ்’ நிறுவனத்தில் அவர் தொடங்கவுள்ள புதிய பணியின் மூலம் ‘நட்சத்திரமாக’ உயர்வார் என்றும் பாராட்டினார்.
யார் இந்த கரோலின் லீவிட்?
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக (White House Press Secretary) நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே இளம் வயதிலேயே (27 வயதில்) வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
நியூ ஹாம்ப்ஷயர் (New Hampshire) மாகாணத்தைச் சேர்ந்த இவர், செயின்ட் ஆன்செல்ம் கல்லூரியில் (Saint Anselm College) தகவல் தொடர்பியல் மற்றும் அரசியல் அறிவியல் பயின்றுள்ளார். டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையின் உதவி செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய இவர், 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பின் தேசிய செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு ஊடகங்களில் முக்கியக் கவனம் பெற்றார்.
ரியல் எஸ்டேட் தொழிலதிபரான நிக்கோலஸ் ரிச்சியோவை (Nicholas Riccio) திருமணம் செய்த கரோலினுக்கு, 2024 ஜூலையில் முதல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மீண்டும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பெரும் கவனம் ஈர்த்தார். தற்போது தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகைப் பதவியிலிருந்து விலகினார். இரண்டாவது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் பிற்பகுதியில் மகப்பேறு விடுப்பில் சென்ற அவர், பின்னர் அப்பணியைத் தொடரப் போவதில்லை என்பதை உறுதி செய்தார்.
வெள்ளை மாளிகையின் மிக இளைய செய்தித் தொடர்பாளர் என்ற சாதனையைப் படைத்திருந்த அவர், நிர்வாகத்தின் முக்கிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் திகழ்ந்தார்.
நிரந்தர செய்தித் தொடர்பாளர் இன்றி தவிக்கும் வெள்ளை மாளிகை :
லீவிட்டின் விலகலுக்குப் பிறகு, கடந்த 86 நாட்களில் 81 நாட்கள் நிரந்தர செய்தித் தொடர்பாளர் இன்றி வெள்ளை மாளிகை தவித்து வருகிறது. கடந்த அக்டோபர் 12 அன்று பழமைவாத விமர்சகரான கேட்டி சக்காரியா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலமாக வெறும் ஐந்து நாட்களிலேயே அக்டோபர் 16 அன்று அவர் ராஜினாமா செய்தார்.

அப்பணியைத் தொடர விருப்பமில்லை என்றால் மறுபரிசீலனை செய்யுமாறு டிரம்ப் முன்னதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த நிலையில், தாம் பணிநீக்கம் செய்யப்படவில்லை எனச் சக்காரியா விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையில், ‘யுஎஃப்சி’ (UFC) தலைவர் டானா ஒயிட்டைக் கொண்டுவரும் யோசனையையும் டிரம்ப் முன்வைத்தார். அவரது அழைப்பை ஏற்று நவம்பர் 9 அன்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு மேடையில் டானா ஒயிட் தோன்றினாலும், “எனக்கு எந்த அரசியல் ஆசையும் இல்லை” எனக் கூறி அப்பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.
செய்தித் தொடர்பாளர் பதவிக்கு சுமார் 100 பேர் வரை ஆர்வம் காட்டியிருந்தாலும், லீவிட்டின் இடத்திற்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருப்பதாக ‘ஃபாக்ஸ் நியூஸ்’ பேட்டியில் டிரம்ப் மனம் திறந்துள்ளார்.
ரஷ்யாவில் ஆதிக்கம் செலுத்தத் துடித்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
