மேற்கு வங்காள மாநிலத்தின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக மாறப்போகிறது. ‘West Bengal’ என்ற ஆங்கில பெயரை மாற்றி, ‘பஸ்சிம் பங்கா’ (Paschim Banga) என்று அழைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சுவேந்து அதிகாரி, இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
டிசம்பர் 9-ல் என்ன நடக்கும்?
மேற்கு வங்காள சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டிசம்பர் 9-ம் தேதி, மாநிலத்தை ‘பஸ்சிம் பங்கா’ என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
“ஆங்கிலத்திலும் கூட, West Bengal என்பது ‘பஸ்சிம் பங்கா’ என்றே எழுதப்படும். ‘பஸ்சிம் பங்கா’ – அது அப்படியே எழுதப்பட வேண்டும். டிசம்பர் 9-ம் தேதி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருகிறோம். அதன் பின் அது மத்திய அரசுக்கும், பின்னர் நாடாளுமன்றத்துக்கும் செல்லும்” என்று அதிகாரி கூறினார்.
ஏன் இந்த பெயர் மாற்றம்?
வங்காள மொழியில் ஏற்கனவே இந்த மாநிலம் ‘பஸ்சிம் பங்கா’ என்று தான் அழைக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் மட்டும் ‘West Bengal’ என்று இருந்தது. இப்போது பாஜக தலைமையிலான அரசு, ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஒரே பெயர் – ‘பஸ்சிம் பங்கா’ – தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.
இதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து பேசிய முதல்வர், “மேற்கு வங்காளம் உருவான வரலாறு 1947 ஜூன் 20-ம் தேதிக்கு போகிறது. அந்த வரலாறு முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக ‘West Bengal’ என்பதற்கு பதிலாக ‘பஸ்சிம் பங்கா’ என்று மாற்றப்பட வேண்டும்” என்றார்.
இது புது முயற்சி இல்லை!
இந்த பெயர் மாற்ற முயற்சி இப்போது தான் முதல் முறையாக நடக்கிறது என்று நினைக்க வேண்டாம்.
1999-ல் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி அரசு, மாநிலத்தை ‘பஸ்சிம் பங்கா’ என்று மாற்ற சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
அதன் பின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ‘பங்களா’ மற்றும் ‘பங்கா’ என்ற பெயர்களை முன்மொழிந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்போது பாஜக அரசு, அந்த பெயர்களை நிராகரித்து விட்டு, வரலாற்று அடையாளத்தை காக்க ‘பஸ்சிம் பங்கா’ தான் சரியானது என்று கூறுகிறது.
அடுத்து என்ன?
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், அது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு பின் தான் அதிகாரப்பூர்வமாக பெயர் மாறும். அரசியல் அமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான ஒப்புதல் தேவை.
அதுவரை, டிசம்பர் 9-ம் தேதி சட்டசபையில் என்ன நடக்கும் என்று ஒட்டுமொத்த மேற்கு வங்காளமும் – மன்னிக்கவும், பஸ்சிம் பங்காவும் – ஆவலுடன் காத்திருக்கிறது.
மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal
