
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், “யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள்” என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியாக குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, இது தொடர்பாக புகார் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை ஏன் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “விவரங்கள் வெளியே கசிந்துவிடும் என்பதால் பதிவேற்றம் செய்யவில்லை” என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பதிலளித்தார்.
நீதிபதி எழுப்பிய சரமாரிக் கேள்விகள்:
தொடர்ந்து விசாரணையின் போது நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்:
* “பொதுத்தளத்தில் பெண்களுக்கு எதிரான இது போன்ற ஆபாசத் தகவல்கள் பரவுவதை ஏன் தடுக்கவில்லை? இது தொடர்பான பதிவுகளை நீக்க ஏற்கனவே வேறு வழக்கில் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என நீதிபதி கேட்டதற்கு, அவை உடனடியாக நீக்கப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* “கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதியே இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்போதே உள் விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மாவட்ட ஆட்சியர் நேற்று புகார் அளிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. உள் விசாரணைக் குழுவை எப்போது அமைக்கப் போகிறீர்கள்? மாநில அளவில் ஏன் இது குறித்து குழு அமைக்கவில்லை?” என நீதிபதி வினவினார்.
* மேலும், “தலைமைச் செயலாளராக இருந்தாலும் சரி, தூய்மைப் பணியாளராக இருந்தாலும் சரி, அல்லது அதற்கும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உயரதிகாரி கண்காணிக்க உத்தரவு:
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சார்பில் வழக்கறிஞர் நாகசைலா ஆஜரானார். மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களையும் இவ்வழக்கில் ஒரு வாதியாகச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேநேரம், எம்.எல்.ஏ. தரப்பில் யாரும் ஆஜராகிறார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி, “இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் (SP) பதிலாக வேறு ஒரு உயரதிகாரி விசாரிக்க வேண்டும். விசாரணையை ஐ.ஜி. (IG) அல்லது டி.ஐ.ஜி. (DIG) அந்தஸ்திலான அதிகாரி கண்காணிக்க வேண்டும். யாரையாவது காப்பாற்ற அரசு முயற்சிப்பது தெரியவந்தால், அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த நேரிடும்” என எச்சரித்தார். அதற்கு, அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
