HomeBreaking Newsதிருவண்ணாமலை: காலை பரணி தீபம் ஏற்றம்;மாலையில் மகா தீபம்!

திருவண்ணாமலை: காலை பரணி தீபம் ஏற்றம்;மாலையில் மகா தீபம்!

-

- Advertisement -

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று (நவம்பர் 24) அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி கருவறைக்கு எதிரில் ஏற்றப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் சிவபெருமானே ஒருவராக நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

அப்போது கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை 6 மணிக்கு மகா தீபம்:

பரணி தீபத்தைத் தொடர்ந்து, விழாவின் உச்ச நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. ‘அனேகன், ஏகன்’ என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் கோயிலிலும், மலை உச்சியிலும் செய்யப்பட்டுள்ளன. சுவாமி சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மற்றும் கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கின்றன.

மகா தீபத்தைக் காணவும், கிரிவலம் செல்லவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் விழாக்கோலம் நிலவுகிறது.

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 7-ஆம் நாள்: 63 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மகா ரதம் கோலாகல தேரோட்டம் – பக்தர்களைத் தாக்கியதாகக் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு!

MUST READ