கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியாளருக்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் விவகாரத்தில், தமிழக அரசையும் முதலமைச்சரையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த தகவல்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையா?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆட்சியரிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சருக்கு தெரியாதா? தலைமைச் செயலாளர் மறைத்தாரா?
பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்தது முதலமைச்சருக்குத் தெரியுமா என்றும், தலைமைச் செயலாளர் இந்தத் தகவலை முதலமைச்சரிடம் மறைத்துவிட்டாரா என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அல்லது, புகார் குறித்துத் தெரிந்திருந்தும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மூத்த அதிகாரிகளை விடுப்பில் அனுப்ப வேண்டும்!
இந்த விவகாரம் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படாமல் புகாரை மறைத்து குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்கத் துணைபோனதாகக் கூறப்படும் தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
அப்போதுதான் இந்தப் புகார் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தல்!
இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
