தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 12 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு, அவற்றை அரிசியாகப் பெற்று விநியோகிக்கும் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, நெல் மூட்டைகளை அரிசியாக மாற்றிப் பெறும் விவகாரத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலைகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 12 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு உதவி மேலாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் சோதனையில் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்குப் பிறகே இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளாத்திகுளம்: மழை இல்லாமல் கருகும் பயிர்கள்… கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கண்ணீர்!
