Homeசெய்திகள்கட்டுரைகாவிரி விவகாரம், தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் – மு.வீரபாண்டியன்!

காவிரி விவகாரம், தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் – மு.வீரபாண்டியன்!

-

- Advertisement -

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ‘மாற்றத்திற்கான நடைபயணம்’ இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்தப் பரப்புரைப் பயணத்தை மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கொடியேற்றித் தொடங்கி வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

we-r-hiring

அப்போது அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:

நாட்டின் நலன் காக்க நாடு தழுவிய நடைபயணம்:

ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை மத்திய அரசை கண்டித்து இந்த நடைபயணம் நடைபெறுகிறது. விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்துதல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கல்வி மற்றும் மருத்துவம் முழுவதும் அரசுத் துறையின் கீழ் கொண்டுவரப்படுதல், பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் வளங்களைச் சூறையாடுவதைத் தடுத்து உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் 1-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணிக்கு அனைத்து சமூக இயக்கங்களும் பேராதரவு தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வு விவகாரம்:

நீட் தேர்வு ரத்து தொடர்பாகச் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நாட்டின் தலைசிறந்த மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வு மூலம் படித்தவர்கள் அல்ல; எனவே நீட் தேர்வு தேவையில்லை. இதற்குச் சட்டப்பேரவை தீர்மானம் மட்டும் போதாது, நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த வலுவான விவாதங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் எழுச்சியும் தேவையுள்ளது” என்றார்.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் கார்ப்பரேட் வரி:

இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே பெரும் முதலாளிகள் உள்ளனர். அவர்களது சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கு வரியாக அரசிடம் வந்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட்டுகள் எவ்விதப் பற்றாக்குறையுமின்றி சாத்தியப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறை மற்றும் நாடாளுமன்ற மரபுகள்:

தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய மு.வீரபாண்டியன், தற்போதுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையே போதுமானது என்றும், தேவையற்ற மற்றும் நெறியற்ற அரசியல் நகர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும், ஆரோக்கியமான விவாதங்களையும் டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத்தில் உறுதி செய்தார். ஆனால், தற்போது அந்த மரபுகள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டு வருவதாகக் கவலை தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம்:

தமிழ்நாட்டைப் பாதிக்கக்கூடிய காவிரி நீர் உரிமை விவகாரம் மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளில், தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என மு.வீரபாண்டியன் தனது பேட்டியின்போது வலியுறுத்தினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 11-வது நாளாக தொடரும் பட்டினி போராட்டம்: போராட பொது இடம் வழங்க அரசுக்கு கோரிக்கை!

MUST READ