தமிழக அரசின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் குறித்து திமுக மாணவரணி துணைச் செயலாளர் தமிழ். கா. அமுதரசன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


தனியார் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசிய அவர், இடைத்தேர்தல் முதல் வெளிநாட்டுப் பயணம், முதலீடுகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் கருத்துகள் குறித்து அமுதரசன்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், பதவியேற்ற சில மாதங்களிலேயே ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவதாக அமுதரசன் குற்றம்சாட்டினார்.
இந்த நடவடிக்கை அப்பட்டமான குதிரை பேர அரசியல் என அவர் விமர்சித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றாலும், நீதிபதிகளின் கருத்துகள் மூலம் இந்த விவகாரம் தொடர்பான கேள்விகள் வெளிப்பட்டுள்ளதாக அமுதரசன் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அசிங்கங்கள் நார்மல் ஆகிவிட்டன” – ஆட்சி மீது விமர்சனம்
தமிழகத்தின் தற்போதைய ஆட்சி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அமுதரசன், கடந்த சில மாதங்களில் மக்கள் கேவலம், அசிங்கம் மற்றும் ஒளிவுமறைவான செயல்கள் என கருதிய விஷயங்கள் அனைத்தும் தற்போது சாதாரணமாகிவிட்டதாக விமர்சித்தார்.
சில நாட்களுக்கு முன்பு வரை விஜயையும் அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்தவர்களுக்கே தற்போது கட்சியில் இடம் வழங்கி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது எந்த வகையான அரசியல் நாகரிகம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கொள்கை ரீதியான காரணங்களுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு துணைபோக முடியாது என விலகியுள்ளதாகவும் அமுதரசன் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுப் பயணம் குறித்து கிண்டல்
முதலமைச்சர் விஜயின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமுதரசன், தமிழகத்தில் இருந்தே மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளுக்காக வெளிநாடு செல்வதாக விமர்சித்தார்.
மீஞ்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனங்களுக்காக லண்டன் சென்று அங்கிருந்து கொடி ஆட்டுவதற்கும், ரீல்ஸ் வெளியிடுவதற்கும் சென்றுள்ளதாக அவர் கிண்டலாக தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணம் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறுவது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கருத்துச் சுதந்திரம் குறித்து கேள்வி
நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பொதுவெளியில் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்போது, அவர்களை தவெக ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும், சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிப்பதாகவும் அமுதரசன் குற்றம்சாட்டினார்.
“டீசென்ட் பாலிடிக்ஸ்” என்று கூறிக்கொண்டு எதிர்க்கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்துவது எந்த வகையான கருத்துச் சுதந்திரம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இடைத்தேர்தல் குறித்து அமுதரசன் கருத்து
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஐந்து முனை அல்லது பலமுனைப் போட்டி நிலவினாலும், மக்கள் உண்மையை புரிந்துகொண்டுள்ளதாக அமுதரசன் தெரிவித்தார்.
மேலும், இந்த இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
