- Advertisement -
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆற்றிய உரை அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கலாம். திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். அமளி ஏற்பட்டிருக்கலாம். ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கலாம். ஆனால், தவெக தலைவரின் அரசியல் உரையாக அது அழுத்தம் பெற்றதே தவிர, முதலமைச்சரின் சட்டப்பேரவை உரையாக அதில் ஏமாற்றமே மிஞ்சியது.

பொதுப்பார்வையில் பார்த்தால், சட்டப்பேரவையில் நேற்று பேசியது த.வெ.க. தலைவர் விஜய்யின் குரலாகவே அதிகம் ஒலித்தது; முதலமைச்சராக விஜய்யின் குரல் குறைவாகவே ஒலித்தது. இதுதான் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய மிகப்பெரிய குறை.
முதலமைச்சராக இருந்தால்..?
ஒரு கட்சித் தலைவர் என்ன செய்யலாம்? முந்தைய ஆட்சியின் ஊழலைப் பேசலாம். பழைய வழக்குகளை தோண்டலாம். சர்க்காரியா கமிஷனை எடுத்துக் காட்டலாம். அமலாக்கத்துறை ஆவணங்களைப் படிக்கலாம். திமுகவின் கடந்தகாலத்தை விமர்சிக்கலாம். அது அரசியலின் ஒரு பகுதி.
ஆனால் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும்? கேள்வி கேட்பதைத் தாண்டி பதிலளிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளைத் தாண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய கோப்புகளை வாசிப்பதைத் தாண்டி புதிய கோப்புகளை உருவாக்க வேண்டும். மக்களுக்கு தெரியாத உண்மையை வெளிக்கொணர வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது இதுதான்.
ED ஆவணங்கள் — புதிதாக என்ன?
விஜய் அமலாக்கத்துறை தொடர்பான ஆவணங்களின் சில பகுதிகளை சட்டப்பேரவையில் படித்துக் காட்டினார். அதில் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. ஆனால் ஒரு அடிப்படை கேள்வி இருக்கிறது. அந்தத் தகவல்கள் ஏற்கனவே பொதுவெளியில் இருக்கிறதா? இல்லையா?
ED வழக்குகள் குறித்து செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் இணைய ஊடகங்களிலும் ஏற்கனவே விவாதங்கள் நடந்துள்ளன. விஜய்யின் உரையிலும் ED ஆவணங்களில் உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டன; ஏற்கனவே பொதுவெளியில் இருக்கும் தகவல்களை மீண்டும் சட்டமன்றத்தில் வாசிப்பது, புதிய ஊழலை அம்பலப்படுத்தியதாக ஆகிவிடாது. பொதுமக்களுக்குத் தெரிந்த தகவலை மீண்டும் வாசிப்பதற்காகவா முதலமைச்சர் சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டும்?
அப்படியில்லாமல், “இதுவரை யாருக்கும் தெரியாத இந்த ஆவணத்தை நான் இப்போது சட்டப்பேரவையில் வைக்கிறேன்; இதன் மீது அரசு இந்த நடவடிக்கையை எடுக்கிறது” என்று சொல்லியிருக்க வேண்டுமா? இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
1970களிலிருந்து 2026 வரை?
சர்க்காரியா கமிஷன் என்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய பெயர் அல்ல. அதன் அறிக்கைகள் பல ஆண்டுகளாகப் பொதுவெளியில் உள்ளன. அதை மீண்டும் சட்டப்பேரவையில் எடுத்துப் பேசுவதில் அரசியல் தாக்கம் இருக்கலாம். ஆனால் நிர்வாகப் பயன் என்ன? மக்களுக்கு என்ன கிடைத்தது?
1970களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் பற்றி 2026-ல் முதலமைச்சர் பேசுகிறார். ஆனால் மக்கள் கேட்கும் கேள்வி, “அதன் மீது இன்று உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது?” என்பதுதான். அந்தப் பழைய விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாதா? முடிந்தால் என்ன நடவடிக்கை? அரசு என்ன செய்யப்போகிறது?
மூன்று கோப்புகள் – எதிர்பார்ப்பு எங்கே போனது?
சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய், தன்னுடைய மேசையில் மூன்று முக்கிய கோப்புகள் இருப்பதாகவும், அவற்றைப் பற்றி பேசப்போவதாகவும் கூறியிருந்தார். அதனால் இயல்பாகவே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.
முதலமைச்சர் நேற்று மூன்றிலிருந்து ஒன்றை ஒரு “sample” ஆகப் பேசுவதாகக் கூறினார். ஆனால் இதுதான் அடுத்த கேள்வியை உருவாக்குகிறது. அந்த மூன்று கோப்புகளின் முழு விவரம் எப்போது வெளிவரும்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். “என்னிடம் File இருக்கிறது” என்பது அரசியல் வசனம். “இதோ File; இதோ ஆதாரம்; இதோ நடவடிக்கை” என்பதுதான் ஆட்சி நிர்வாகம்.
புதிய அறிவிப்பு எங்கே?
இன்னொரு முக்கியமான ஏமாற்றம். விவாதம் நடந்தது காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பாக.
காவல்துறை நவீனமயமாக்கல், காவலர்களின் பணிச்சுமை குறைப்பு, காவலர் பற்றாக்குறை தீர்வு, பெண்கள் பாதுகாப்புக்கான புதிய நடவடிக்கைகள், Cyber Crime தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு, காவல் நிலையங்களில் தொழில்நுட்ப மேம்பாடு, காவலர்களுக்கான நலத்திட்டங்கள், காவல்துறையின் பொறுப்புக்கூறல், குற்றவியல் விசாரணையின் தரத்தை உயர்த்தும் திட்டங்கள்;
இதுபோன்ற அறிவிப்புகள் இல்லாமல், உரையின் பெரும்பகுதி அரசியல் குற்றச்சாட்டுகளிலும் கடந்தகால விவகாரங்களிலும் சென்றுவிட்டது. சட்டம்–ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, ஊழலை எந்த நிலையிலும் ஏற்கமாட்டோம் போன்ற நிலைப்பாடுகளை முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய திட்டம் எங்கே? அதுதானே சட்டப்பேரவை உரையில் அதிகமாக ஒலித்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் திமுகவை குற்றம்சாட்டலாம்
மக்களுக்கு கடந்த ஆட்சியின் தவறுகளைத் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது. ஊழல் நடந்திருந்தால் வெளிக்கொண்டு வர வேண்டும். முறைகேடு நடந்திருந்தால் விசாரிக்க வேண்டும். பொதுப்பணத்தை கொள்ளையடித்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“அவர்கள் ஊழல் செய்தார்கள்” என்று முதலமைச்சர் சொல்வது ஒரு அரசியல் குற்றச்சாட்டு. ஆனால், “இதோ ஆதாரம், இதோ விசாரணை, இதோ FIR, இதோ கைது, இதோ சொத்து முடக்கம், இதோ நீதிமன்ற நடவடிக்கை.” என்று சொல்வதுதான் நிர்வாகச் சாதனை.
விஜய்க்கு மக்கள் கொடுத்த அதிகாரம்
தமிழக மக்கள் த.வெ.க.வுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியபோது, அவர்கள் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை எதிர்பார்த்தார்கள். பழைய கட்சிகளின் அரசியல் மொழியை மாற்றுவார். பழைய அரசியலுக்கு மாற்றாக புதிய நிர்வாகத்தை உருவாக்குவார். குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லாமல் தீர்வுகளை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படியிருக்க, பழைய குற்றச்சாட்டுகளை புதிய மைக்கில் வாசிப்பது மட்டும் புதிய அரசியலாகிவிடுமா? இது, த.வெ.க. அரசு தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
“பழைய கள்… புதிய மொந்தை”
குற்றச்சாட்டுகள் பழையது. ஆவணங்கள் பொதுவெளியில் உள்ளவை. சர்க்காரியா கமிஷன் பழையது. ED விவகாரங்கள் ஏற்கனவே செய்திகளில் வந்தவை. ஆனால் அவற்றை சட்டப்பேரவை மேடையில் முதலமைச்சர் வாசித்ததால் அது புதிய தகவலாக மாறிவிடாது. புதிய மொந்தையில் ஊற்றினால் பழைய கள் புதியதாகிவிடாது.
நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, எத்தனை ஊழல் புகார்கள் மீது விசாரணை தொடங்கினீர்கள்? எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை? எத்தனை வழக்குகள் பதிவு? எவ்வளவு பொதுப்பணம் மீட்கப்பட்டது? காவல்துறையில் செய்யப்பட்ட மாற்றம் என்ன? பெண்கள் பாதுகாப்பில் என்ன புதிய நடவடிக்கை? போதைப்பொருள் கட்டுப்பாட்டில் என்ன புதிய சாதனை? சைபர் குற்றங்களில் என்ன புதிய அமைப்பு?
இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு? முதலீட்டில் என்ன முன்னேற்றம்? மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன மாற்றம்? இதற்கான பதில்களைத்தான் சட்டப்பேரவையில் ஒலித்திருக்க வேண்டும். தமிழ்நாடு கேட்பது பழைய அரசுகளின் புதிய பதிப்பு அல்ல. புதிய அரசின் உண்மையான அத்தியாயம்.
“சட்டமன்றத்தை சினிமா படமாக்கிய தவெக!” – விஜய், அமைச்சர்களை விளாசிய திமுக பரந்தாமன்
