“எங்க வீட்டுத் தண்ணி பளிங்கு மாதிரி நல்லாத்தான் இருக்கு” என்று மார்தட்டிக்கொண்டு, கிணற்று நீரையும் போர்வெல் நீரையும் ஒரு சாதாரண ஃபில்டரை மட்டுமே நம்பிக் குடித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மிகப்பெரிய ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது!


சென்னையின் நிலத்தடி நீரின் தரம் குறித்து வெளியாகியுள்ள ஓர் அதிரடி அறிவியல் ஆய்வு, ஒட்டுமொத்த மாநகரத்தின் நீர்வளப் பாதுகாப்பையும் உலுக்கி எடுத்துள்ளது. சென்னையில் உள்ள வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (VIT) ஆய்வாளர்களான பிரபு பாபு மற்றும் சௌரப் சந்திர மவுரியா ஆகியோர் சென்னையின் 39 முக்கியக் கிணறுகளிலிருந்து எடுத்த நீர் மாதிரிகளை ஆய்வு செய்து ‘Applied Water Science’ எனும் புகழ்பெற்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிட்ட முடிவுகள், சென்னை மக்களின் நெஞ்சில் அனலை அள்ளி வீசியுள்ளன.
3-ல் 1 பங்கு குடிநீர் பாழாச்சு! அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!
மொத்தக் கரைசல் திடப்பொருட்கள் (TDS), நைட்ரேட், கால்சியம், மக்னீசியம், ஃபுளோரைடு, மின்கடத்துத்திறன் உள்ளிட்ட 12 உயிர்க்கொல்லி அளவுருக்களை வைத்து நடத்தப்பட்ட அதிநவீனப் பரிசோதனையின் முடிவுகள் இதோ:
7.1% — மிகச் சிறந்த தரம்
62.8% — நல்ல தரம்
25.9% — மோசமான தரம்
0.7% — மிகவும் மோசமான தரம்
3.5% — குடிக்கவே தகுதியற்ற நச்சு நீர்
மோசமானது, மிகவும் மோசமானது, குடிக்கத் தகுதியற்றது என அனைத்தையும் கூட்டினால் சுமார் 30% நீர் மாதிரிகள் நச்சுக்களமாக மாறியுள்ளன. அதாவது, சென்னையில் பரிசோதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் 3-ல் 1 பங்கு நீர், மனிதர்கள் குடிக்கவே லாயக்கற்ற ஆபத்தான நிலையில் தத்தளிக்கிறது!
தரமணிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’
இந்த ஆய்வில் ஒட்டுமொத்த சென்னைக்கும் உச்சக்கட்ட திகிலைக் கிளப்பியுள்ள பகுதி ‘தரமணி’. அங்குப் பதிவான நீர்த் தரக் குறியீடு (Water Quality Index) வரலாறு காணாத வகையில் 699 ஆகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச விதிகளின்படி, இந்த நீர்த் தரக் குறியீடு 300-ஐத் தாண்டினாலே அது குடிக்கத் தகுதியற்ற ‘நச்சு நீர்’ என்று முத்திரை குத்தப்படும். ஆனால் தரமணியில் அது 699-ஐத் தொட்டு நிற்கிறது என்றால், நிலத்தடி நீர் எந்த அளவிற்கு நாசமாகிப் போயிருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
பூமிக்கடியில் ஊடுருவும் கடல்நீரும்… கலக்கும் நச்சுக் கழிவுநீரும்!
சென்னையின் நிலத்தடி நீர் இப்படிப் பாழாவதற்குப் பிரதானமாக மூன்று காரணங்கள் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன:
கடல்நீர் ஊடுருவல்: கட்டுப்பாடற்ற முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று, கடலோரப் பகுதிகளிலிருந்து உப்பு நீர் பூமிக்குள் பாய்கிறது. இதன் வெளிப்பாடுதான் ஆய்வில் பதிவான 13,088 மின்கடத்துத்திறன் (Electrical Conductivity) அளவு!
கழிவுநீர் கசிவு: உடைந்த கழிவுநீர் குழாய்கள், சாக்கடைக் கசிவுகள் பூமிக்குள் இறங்கி நிலத்தடி நீரை நஞ்சாக்குகின்றன. மனிதக் கழிவுகளால் நைட்ரேட் அளவு விண்ணைத் தொட்டு நிற்கிறது.
இயற்கையான நில அமைப்பும் நகர்மயமாக்கலும்: கான்கிரீட் காடுகளாக மாறியதால் மழைநீர் பூமிக்குள் இறங்க வழியின்றி, நிலத்தடி நீர் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் இயற்கை சுழற்சியே செத்துப்போய்விட்டது.
2022-ல் இது நிலைமை என்றால்… 2026-ல் என்ன கதி?
இங்கே நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயம் ஒன்று உண்டு. இந்த ஆய்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது 2022-ல்! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிலைமையே 699 என்றால், இடைப்பட்ட ஆண்டுகளில் கண்மூடித்தனமாகப் பெருகிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் கழிவுநீர் சீர்கேடுகளுக்குப் பிறகு, 2026-ல் இன்றைய நிலைமை என்னவாக இருக்கும்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
அரசுக்கு 5 அவசர எச்சரிக்கைகள்
தொடர் நீர்த் தரக் கண்காணிப்பு: ஆண்டுக்கு ஒருமுறை சம்பிரதாயப் பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் பருவத்திற்குப் பருவம் நீரின் தரத்தைக் கண்காணிக்க வேண்டும்.
ஆய்வு முடிவுகளை மக்களிடம் வெளியிடு: எந்த ஏரியாவில் உப்புநீர் அதிகம்? எங்கு கழிவுநீர் கலக்கிறது? என்பதை வெளிப்படையாக அறிவித்து மக்களை உஷார்படுத்த வேண்டும்.
மழைநீர் செறிவூட்டல்: வெறும் மொட்டை மாடி சேகரிப்போடு நிறுத்தாமல், ஏரி, குளம், திறந்தவெளிகளைப் பாதுகாத்து நிலத்தடி நீர்வளத்தை மீண்டும் நிரப்ப வேண்டும்.
கழிவுநீர்க் கசிவுக்கு மரண அடி: பூமிக்கடியில் கழிவுநீர் கசியும் பாதாளச் சாக்கடைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான உறிஞ்சுதலுக்குத் தடை: நிலத்தடி நீர்மட்டத்தைக் கணக்கிடாமல் லாரிகளிலும் மோட்டார்களிலும் கட்டுப்பாடின்றி நீர் உறிஞ்சப்படுவதற்குக் கடிவாளம் போட வேண்டும்.
மக்களே அலட்சியம் வேண்டாம்!
“எங்க வீட்டுல RO ஃபில்டர் இருக்கு, நாங்க தப்பிச்சுட்டோம்” என்று குருட்டுத்தனமாக நம்பாதீர்கள். உங்கள் வீட்டு நிலத்தடி நீரை உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் கொடுத்து 12 அளவுருக்களையும் பரிசோதியுங்கள். கண்முன்னே நிலத்தடி நீர்வளத்தை நாம் தொலைத்துவிட்டால், அதை மீண்டும் மீட்டெடுக்க பல தலைமுறைகள் தேவைப்படும்!
