திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் – சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு தமிழ்நாட்டில் கலவர சூழ்நிலையை உருவாக்குவதற்கான வேலையை செய்வதாகவும், இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.


மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவார் அமைப்பினர் நாடு முழுவதும் 1,856 மசூதிகளை இடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் சிக்கந்தர் தர்கா என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- ReclaimTemples.com என்கிற இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் அப்படி உள்ளதாகவும், அவற்றை மீட்டால் ஒரு கோடிக்கு மேல் வேலைவாய்ப்பும், ரூ.100 கோடிக்கு மேல் வளங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதில் வெளியிட்டிருக்கும் பட்டியலில் திருப்பரங்குன்றம் மற்றும் கோரிப்பாளையம் தர்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தாஜ்மஹால், குதுப் மினார், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களை மீட்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். 1856ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இஸ்லாமியர் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில்களின் பட்டியல் என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் 175 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளம் கேரள முகவரியில் பதிவாகியுள்ளது. இதன் மெயில் ஐ.டி. பார்க்கும்போது பகாமாஸ் நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு பட்டியலில் சென்னை கோவளம் பள்ளிவாசல், திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், கோவை கோட்டைமேடு பள்ளிவாசல், மதுரை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல், கோரிப்பாளையம் தர்கா, ஏர்வாடி தர்கா, கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல், நாகூர் பள்ளிவாசல் உள்ளிட்ட முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருந்தே இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளத்தில் மக்கள் போராடியபோது வெளிநாட்டில் இருந்து நிதி வருவதாக குற்றம்சாட்டினார்கள். தற்போது திருப்பரங்குன்றத்தில் போராடுபவர்களுக்கு பகாமாஸ் நாட்டில் இருந்து பணம் வருகிறதா? என்று விசாரிக்க வேண்டும்.
இதை தமிழக காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும். சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டம், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டம், ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குறிப்பிட்ட இணையதள நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரிக்க வேண்டும். அந்த இணையதளத்தில் ஒரு திட்டத்திற்கும் இவ்வளவு பணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருப்பரங்குன்றத்தில் போராடுபவர்களுக்கு பணம் வந்ததா? என்று காவல்துறை விசாரிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக 1996, 2014, 2017ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளில் ராம ரவிகுமார் வரவில்லை. ஆடு, கோழி வெட்டுவது தொடர்பான வழக்கு, 2021 நீதிபதி இளங்கோவன் வழக்கு, சிக்கந்தர் தர்கா தொடர்பான வழக்குகளில் வராத ராம ரவிகுமார், திடீரென கார்த்திகை தீபத்தின் போது களமிறங்குகிறார்.அவர் எப்படி இறங்கினார்? அதற்கு காரணம் என்ன?
இன்றைக்கு தீபம் ஏற்ற இந்துக்கள் எல்லாம் வாருங்கள் என்று அழைக்கும் ராம ரவிக்குமார், மதுரை மாவட்டம் உத்தபுரம் தீண்டாமை தடுப்புச்சுவர் விவகாரத்தில் பட்டியல் இனமக்கள் கோயிலுக்குள் சுதந்திரமாக வழிபாடு நடத்த முடியாபடி வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றவர் ஆவார். தீண்டாமை உணர்வை கடைபிடிக்கும் ராம ரவிகுமாரை, இதுவரை ஆர்எஸ்எஸ் மூலையில் போட்டு வைத்திருந்தனர். தற்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர சொல்லியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் எந்த அடிப்படையில் ராம ரவிகுமாரை கொண்டு வருகிறார்கள். இணையதளத்தில் சொல்லப்பட்ட விஷயத்திற்கும், அவருக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கு இங்குள்ள விவரங்களை கொடுத்தவர்கள், நிதி அளித்தவர்கள் விவரங்கள் மற்றும் அந்த நிதி போராட்டம் நடத்தும் ராம ரவிகுமார் போன்றவர்களுக்கு வழஙகப்பட்டதா? என்று விசாரிக்க வேண்டும். ரீக்ளைம் டெம்பிள்ஸ் இணையதளத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களும், இவர்கள் போராடுவதும் ஒத்து போகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில், இவர்கள் மற்ற 5 இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரம் எதேர்ச்சையாக நடைபெறும் பிரச்சினை அல்ல. மிகவும் தெளிவாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலவர சூழ்நிலையை உருவாக்குவதற்கான வேலைகளை செய்கிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


