Homeசெய்திகள்கட்டுரை"எங்களுக்கு அரசியலில் பகைமுரண் ஆர்.எஸ்.எஸ் - பாஜக மட்டுமே": மு.வீரபாண்டியன் பேட்டி!

“எங்களுக்கு அரசியலில் பகைமுரண் ஆர்.எஸ்.எஸ் – பாஜக மட்டுமே”: மு.வீரபாண்டியன் பேட்டி!

-

- Advertisement -

ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும், ஆளுநரின் அதிகார வரம்பு மீறலைத் தடுப்பதற்காகவுமே புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மு.வீரபாண்டியன், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மட்டுமே தங்களின் அரசியல் பகைமுரண் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். சன் நியூஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியின் முக்கிய விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:

மு.வீரபாண்டியன்

we-r-hiring

புதிய அரசுக்கு வெளிப்படையான ஆதரவு

புதிய அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “எந்த அழுத்தமும் எங்களுக்கு இல்லை. ஆளுநர் தன் எல்லையை மீறி அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அமைப்பாக நாங்கள் கூடி, ஜனநாயகத்தைக் காப்பதற்காக எடுத்த அரசியல் முடிவு இது. நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை; அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை. மக்கள் வாக்களித்து உருவெடுத்துள்ள இந்தப் புதிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். நாட்டு மக்களுக்கு உழைப்பவர்களுக்கும், ஆதரவாக இருப்பவர்களுக்கும் பக்கபலமாக இருப்போம்; அதை எதிர்த்து இடர் வரும்போது எதிர்த்துக் குரல் எழுப்புவோம்” என்றார்.

தலைவர்கள் மற்றும் அரசியல் பார்வை

திராவிட இயக்கங்கள் குறித்துப் பேசுகையில், “தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரை நாங்கள் மதிக்கிறோம். அதேபோல், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் ஜனநாயக சக்திகளாகவே பார்த்தோம். எங்களுக்கு அரசியலில் பகைமுரண் என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக மட்டுமே” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

கல்வியும் மருத்துவமும் மாநில பட்டியலுக்கே!

மத்திய அரசின் தலையீடுகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்து மு.வீரபாண்டியன் கூறுகையில், “கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும். ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றியது நமது மருத்துவக் கட்டமைப்புதான். எனவே, கல்வியும் மருத்துவமும் மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டும்” என்றார்.

மேகதாது விவகாரம்: காவிரி தமிழ் மண்ணின் தொன்மை

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அவர் குறிப்பிடுகையில், “மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது; அதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். இதில் கர்நாடக அரசு அரசியல் செய்கிறது. காவிரி என்பது வெறும் நீர் அல்ல, தமிழ் மண்ணின் தொன்மை. அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது; தடுத்தாலும் தடையை மீறி தமிழகத்திற்கு நீர் வரும். இங்கு வந்தால்தான் காவேரிக்கு முழுப் பொருள் படும்” எனத் தெரிவித்தார்.

தமிழ் மொழிக்கு முதன்மை முக்கியத்துவம்

தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த நிலைப்பாடு குறித்துப் பேசுகையில், “தமிழ் மொழிக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்; அது எக்காரணத்தைக் கொண்டும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என்பது எங்களின் உறுதியான நிலைப்பாடு. நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து தேசபக்திப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

திராவிடக் கோட்டையைத் தகர்த்த திரை அரசியல்: திமுக எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சவால்கள் என்ன? – பத்திரிகையாளர் உமாபதியின் அலசல்!

MUST READ