Homeசெய்திகள்கட்டுரைபெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் மெகா ஊழலா? – எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அதிரடி பேட்டி!

பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் மெகா ஊழலா? – எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அதிரடி பேட்டி!

-

- Advertisement -

கோவையில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

நூல் கொள்முதலில் முறைகேடு குற்றச்சாட்டு

பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதல் மற்றும் மின்சாரக் கொள்முதல் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவிட்டு உருவாக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தின் நூல் கொள்முதலிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதவன் தீட்சண்யா குற்றம்சாட்டினார்.

புத்தகக் கண்காட்சிகளின்போது போலியான பதிப்பகங்களை உருவாக்குவது, போலியான எழுத்தாளர் பெயர்களில் ISBN எண்களைப் பெறுவது போன்ற முறைகேடுகள் கடந்த காலங்களிலும் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால், மிகப்பெரிய நூலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் விவகாரம் கவலைக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

ஒரே பதிப்பகத்திலிருந்து ஆயிரக்கணக்கான நூல்கள்?

குறிப்பிட்ட ஒரே பதிப்பகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட மற்றும் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட நூல்கள் நூலகத்தில் இடம்பெறுவது வாசகர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தரமற்றவை மற்றும் போலியானவை எனக் குற்றம்சாட்டப்படும் நூல்களை நூலகத்திலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற பதிப்பகங்களின் நூல்கள் தமிழகத்தின் எந்த நூலகத்திலும் இடம்பெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முந்தைய ஆட்சி மீது பழிபோடக் கூடாது – ஆதவன் தீட்சண்யா

இந்த விவகாரம் தொடர்பாக முந்தைய ஆட்சிக் காலத்திலேயே டெண்டர் விடப்பட்டதாக அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுவதை ஆதவன் தீட்சண்யா விமர்சித்தார்.

எல்லா பிரச்சினைகளுக்கும் முந்தைய ஆட்சியின் மீது பழிபோட்டுவிட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது என்றும், கடந்த ஆறு மாதங்களாக ஆட்சியில் இருப்பவர்கள் இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உண்மையாக உழைக்கும் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், நூல் கொள்முதல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதவன் தீட்சண்யா வலியுறுத்தினார்.

பெரியார் அறிவுலக நூலகத்தின் நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டிங் ஆபரேஷன் நாடகமா? – மார்க்சிய சிந்தனையாளர் மருதையன் பரபரப்பு பேட்டி!

MUST READ