Homeசெய்திகள்கட்டுரைஹோர்முஸ் ஜலசந்திப் போர்: தொடரும் மோதலும் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலும்

ஹோர்முஸ் ஜலசந்திப் போர்: தொடரும் மோதலும் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலும்

-

- Advertisement -

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டாம் கட்டப் போர், ஹோர்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) எதிர்காலத்தையும், அதில் கப்பல் போக்குவரத்துக்கான அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் மையமாகக் கொண்டே முழுமையாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), எந்தவொரு தெளிவான உடன்பாட்டையும் எட்டவில்லை என்பதையே தற்போதைய போரின் தொடர் சம்பவங்கள் காட்டுகின்றன.

ஹோர்முஸ்

we-r-hiring

ஈரான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பதிலடித் தாக்குதல்களை நடத்தி வருவதால், வணிகக் கப்பல் உரிமையாளர்கள் தங்களுக்குள் வேறு வழியின்றி ஒரு “நியாயமான சுங்கக் கட்டணத்தை” (Logical Toll) செலுத்தத் தயாராகி வருகின்றனர். இருப்பினும், இது உலகில் உள்ள பிற சர்வதேச ஜலசந்திகளுக்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

போருக்கு வழிவகுத்த முதன்மைச் சம்பவங்கள்

அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14 அன்று போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளை இறுதி செய்தன. அந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் 60 நாட்களுக்கு மட்டும் எவ்விதக் கட்டணமும் இன்றி கப்பல்களைச் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார் சேவைகளை வரையறுக்க ஓமன் நாட்டுடன் சேர்ந்து ஈரான் பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்த இரண்டு நாட்களிலேயே (ஜூன் 16), மே மாதத்தில் ஈரானால் உருவாக்கப்பட்ட ‘பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம்’ (PGSA) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஜலசந்தியை நடத்தும் முதன்மை அமைப்பாகத் தன்னைத் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்ட அந்த அமைப்பு, ஜலசந்தையைக் கடக்கும் ஒவ்வொரு கப்பலும் அனுமதிச் சீட்டும் (Passage Permit), PGSA அங்கீகரித்த காப்பீடும் வைத்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியது. தற்போது அது இலவசம் என்றும், எதிர்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதன் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வப் பலனைத் தனக்குச் சாதகமாக ஈரான் மாற்ற முயன்றது.

ஜூன் 21 அன்று சுவிட்சர்லாந்தில் அமெரிக்க-ஈரான் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, மறுநாள் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியது. ஆனால், ஏற்கனவே அமெரிக்கத் தடையில் இருந்த PGSA அமைப்புக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் கப்பல் நிறுவனங்கள் அந்த அமைப்புடன் தொடர்பு கொள்ள அஞ்சின.

சர்வதேச பாதை மோதலும் அமெரிக்காவின் எதிர்ப்பும்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, ஜூன் 23 முதல் 25 வரை ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே ஜூன் 24 அன்று, சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), ஓமன் நாட்டுடன் இணைந்து ஒரு தற்காலிகப் பாதையை முறைப்படி அறிவித்தது. ஈரான் சுட்டிக்காட்டிய வடக்கு வழியோடு, ஓமன் வழியிலான தெற்குப் பாதையும் இதில் அடங்கும். தங்களைக் கலந்தாலோசிக்காமல் இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அதிருப்தி தெரிவித்த ஈரான், தங்கள் அனுமதி பெறாத எந்தவொரு பாதையும் “அபாயகரமானது மற்றும் சட்டவிரோதமானது” என எச்சரித்தது.

பஹ்ரைனில் நடைபெற்ற ஜி.சி.சி (GCC) கூட்டத்தில் பேசிய மார்கோ ரூபியோ, “ஒரு நாட்டின் எல்லைக் கடற்பகுதிக்கு அருகில் கட்டணம் வசூலிப்பதை அனுமதித்தால், அது உலகம் முழுவதும் தொற்றுநோய் போலப் பரவிவிடும்” என்று கூறி, ஈரானின் கட்டுப்பாட்டுக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதே நாளில், ஈரானின் கட்டுப்பாட்டை எதிர்க்கும் கூட்டுப் பிரகடனத்தில் அமெரிக்காவும் ஜி.சி.சி நாடுகளும் கையெழுத்திட்டன. இதற்குப் பதிலடியாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC), ஓமன் பாதையில் செல்லும் கப்பல்களுக்குப் பகிரங்க மிரட்டல் விடுத்தது. பதிலுக்கு IMO அமைப்பும் ஈரானின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.

தோற்ற பேச்சுவார்த்தைகளும் ‘மலாக்கா’ முன்னுதாரணமும்

ஜூன் 30 அன்று தோஹாவில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையின் போது, மலாக்கா-சிங்கப்பூர் ஜலசந்தியைப் போல ஹோர்முஸிலும் விருப்பப்பட்டால் செலுத்தும் கட்டண முறையைக் (Voluntary Toll) கொண்டு வர ஈரானும் ஓமனும் முன்மொழிந்தன. ஆனால், போருக்கு முந்தைய பழைய நிலையையே (Status Quo) அமெரிக்கா வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தை முறிந்தது.

சிங்கப்பூர் துறைமுக ஆணையம் மறுப்பு தெரிவித்து, ‘தி இந்து’ நாளிதழுக்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்த செய்தித் தொடர்பாளர், “மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஜலசந்திகளில் பயணிக்கும் கப்பல்களுக்கு இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் எந்தவிதக் கட்டணமும் அல்லது சுங்கக் வரியும் விதிப்பதில்லை. அங்கிருக்கும் நிதியம் (Aids to Navigation Fund) தன்னார்வப் பங்களிப்புகளால் இயங்குவதே தவிர, அது பயணக் கட்டணம் அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.

மீண்டும் வெடித்த போர்!

ஜூலை முதல் வாரத்தில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. ஜூலை 7 அன்று துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டில், டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய நாடுகள் ஹோர்முஸ் பகுதியைச் சுதந்திரமாக வைக்க உதவவில்லை எனக் குற்றம் சாட்டினார். அதே நாளில், ஓமன் பாதையில் சென்ற ‘அல் ரிகய்யாத்’ (Al Rekayyat) என்ற உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி (LNG) சரக்கக் கப்பல் உட்பட மூன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஒரு குறுகிய பாதையில் திரவ இயற்கை எரிவாயு (LNG) டேங்கர் வெடித்துச் சிதறுவது கப்பல் துறையின் மிக மோசமான அச்சுறுத்தலாகும். இதனால் ஆத்திரமடைந்த டொனால்ட் டிரம்ப், “போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என அறிவிக்க, போர் மீண்டும் தொடங்கியது.

அடுத்தடுத்துத் தொடரும் தாக்குதல்கள்

ஜூலை 11, 2026 அன்று ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதியும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. சில மணி நேரங்களிலேயே ‘டி.எஃப்.எஸ் கேலக்ஸி’ (DFS Galaxy) என்ற கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தைத் தடுக்கும் நோக்கில் வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல்களைத் தொடங்கி, நீக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தியது.

அமெரிக்காவின் உரிமைகோரலும் கள நிலவரமும்

ஈரானின் தாக்குதல் திறனைத் தடுத்துவிட்டதாக அமெரிக்கா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. ஜூலை 13 அன்று ஈரானின் 6 தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு அமெரிக்காவின் CENTCOM அமைப்பு இதே உரிமைகோரலை முன்வைத்தது. ஆனால், அதே நாளில் 2 டேங்கர் கப்பல்களைச் செயலிழக்கச் செய்ததாக ஈரான் பதிலடி அறிவித்தது.

ஜூலை 15 அன்று ‘கிரேட் டன்பா’ தீவு மீதான தாக்குதலுக்குப் பிறகும் அமெரிக்கா இதே கூற்றை ஆவர்த்தனம் செய்தது. இருப்பினும், ஜூலை 16 அன்று ஜாயிண்ட் மரைடைம் இன்ஃபர்மேஷன் சென்டர் (JMIC), ஹோர்முஸ் பகுதிக்கான அபாய அளவை “மிகக் கடுமையானது” (Severe) என உயர்த்தியது. கிரேக்கத்தின் 9 எல்.என்.ஜி டேங்கர்கள் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. காப்பீட்டு நிறுவனங்களும் அங்கு இன்னமும் ஆபத்து நீடிப்பதாகவே கருதுகின்றன. ‘லாயிட்ஸ் லிஸ்ட்’ (Lloyd’s List) தரவுகளின்படி, ஜூன் இறுதியில் வாரத்திற்கு 282 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து, ஜூலை இரண்டாவது வாரத்தில் 164 ஆகக் குறைந்துள்ளது.

மாற்று வழிகளும் கப்பல் நிறுவனங்களின் மனநிலையும்

ஹோர்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா குழாய் இணைப்புப் பகுதிக்கு வெளியே கப்பலுக்குக் கப்பல் சரக்கு மாற்றும் முறையை ஈரான் இலக்கு வைத்து வருகிறது. மேலும், செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்களைத் தாக்குவதன் மூலம், சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் இணைப்பையும் முடக்கும் முயற்சியில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘மேரிஸ்க்ஸ்’ (Marisks) என்ற கிரேக்க கடல்சார் அபாய மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிமிட்ரிஸ் மேனியாடிஸ் கூறுகையில், தொடர்ச்சியாக நடக்கும் இந்த இழுபறிகளால் கப்பல் நிறுவனங்கள் கடும் சோர்வடைந்துள்ளன என்றும், 20% கட்டணம் என்பது மிகவும் அதிகம், ஆனால் சட்டப்பூர்வமாக ஒரு ‘நியாயமான சுங்கக் கட்டணத்தை’ (Logical Toll) முறைப்படுத்தினால், கப்பல் நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொண்டு அமைதியை விரும்பும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் மேலாதிக்கத்தைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் இந்த அதிகாரப் போட்டி, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும், கடல்சார் வர்த்தகத்தையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

MUST READ