பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டு, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகத் திகழும் தாஜ்மஹால் மீண்டும் சட்டப் போராட்டங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
தாஜ்மஹாலில் ஆய்வு (Survey) நடத்தக் கோரிய மனுவை ஆக்ரா கீழமை நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், மத்திய அரசும் இந்தியத் தொல்லியல் துறையும் (ASI) பதிலளிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தாஜ்மஹால் உண்மையில் ‘தேஜோ மகாலயா’ என்ற இந்து கோவில் என்றும், அங்கு வழிபாடு செய்ய அனுமதி வழங்கி வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் தொடர்ந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணியும் வடிவமைப்புச் சர்ச்சைகளும்
ஷாஜஹான் தனது மனைவி அர்ஜுமந்த் பானுவின் (முmashtami) நினைவாக உஸ்தாத் அகமது லஹோரி தலைமையில் 22 ஆண்டுகள் எடுத்து இதைக் கட்டினார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறாகும். இருப்பினும், இதன் முதன்மைச் சிற்பி குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் உரிமை கோரல்கள் எழுந்தன.
ஐரோப்பிய உரிமை கோரல்கள்
17-ஆம் நூற்றாண்டில் ஜெரோனிமோ வெரோனியோ என்ற வெனிஸ் ரத்தின வியாபாரியும், 19-ஆம் நூற்றாண்டில் ஆஸ்டின் டி போர்டியாக்ஸ் என்ற பிரெஞ்சுக்காரரும் இதன் சிற்பிகள் எனக் கூறப்பட்டது. ஆனால், தாஜ்மஹால் கட்டத் தொடங்கிய 1632-லேயே ஆஸ்டின் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கிச் சிற்பி கூற்று
‘தாரிக்-இ-தாஜ்மஹால்’ நூலில் துருக்கி சுல்தானின் முஹம்மது எஃபெண்டி வடிமைத்தார் எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் கட்டிடக் கலைஞரே இல்லை என்பது ஆய்வில் நிருபணமானது.
வரலாற்றாசிரியர்கள் உறுதி
இர்பான் ஹபீப், அதர் அலி, சதீஷ் சோப்ரா, சையத் அலி நதீம் ரசாவி போன்ற புகழ்பெற்ற இந்திய இடைக்கால வரலாற்றாசிரியர்கள் எவரும் இது ஷாஜஹானின் மனைவியின் நினைவிடம் என்ற உண்மையை மறுத்ததில்லை.
பி.என். ஓக்கின் கூற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்
தாஜ்மஹால் குறித்து முதன்முதலில் சந்தேக விதையை விதைத்தவர் பி.என். ஓக் (P.N. Oak) ஆவார்.
1965: ‘Taj Mahal is a Temple Palace’ என்ற நூலில் இது 4-ஆம் நூற்றாண்டு ராஜபுத்திர அரண்மனை என்றார்.
1989: ‘Taj Mahal: The True Story’ என்ற நூலில் நிலைப்பாட்டை மாற்றி, இது 12-ஆம் நூற்றாண்டின் தொடக்க கால இந்து கோவில் எனக் கூறினார். எவ்வித அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லாததால் வரலாற்று ஆய்வாளர்கள் இக்கூற்றை நிராகரித்தனர். 2000-ஆம் ஆண்டில் பி.என். ஓக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது கூற்றை ஆதாரமற்றது எனக் கூறி முற்றிலுமாகத் தள்ளுபடி செய்தது.
சட்டப் போராட்டங்களின் காலக்கோடு
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், தாஜ்மஹால் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடர்ந்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
2005 ஆம் ஆண்டு
அயோத்தியா சத்பாவனாவின் உறுப்பினரான அமர்நாத் மிஸ்ரா என்பவர், தாஜ்மஹால் 1189-இல் சந்தேல மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு கோவில் எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு
தாஜமஹாலை ஒரு இந்து கோவில் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கோரி ஆக்ரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
2022 ஆம் ஆண்டு
தாஜ்மஹால் தொடர்பான உண்மைகளைக் கண்டறியக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல மனு (PIL) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சமீபத்தில் ஞானவாபி மற்றும் போஜசாலா வழக்குகளில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) அதிகாரப்பூர்வ நிலைப்பாடு
2017-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தொல்லியல் துறை தனது தெளிவான நிலைப்பாட்டைப் பதிவு செய்தது. “தாஜ்மஹால் என்பது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு முகலாய நினைவிடமே ஆகும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டிடக்கலை நுட்பங்கள் மற்றும் சுவரோவிய வேலைப்பாடுகள் (‘பியட்ரா துரா’ – Pietra Dura) இடைக்காலத்திற்கு முந்தைய இந்தியக் கட்டிடக்கலையில் எங்கும் நிலவவில்லை.” தொல்லியல் துறையின் அறிவியல் பூர்வ சான்றுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தள்ளுபடி உத்தரவுகள் இருந்தபோதிலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நோட்டீஸால் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மத்திய அரசு மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் கையிலுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்திப் போர்: தொடரும் மோதலும் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலும்
