நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இவருடைய தனித்துவமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. அந்த வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சரிவை சந்தித்தது. அதைத் தொடர்ந்து சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்திலும், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த வெங்கி அட்லூரி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வாடிவாசல் படத்திற்கு முன்பாகவே சூர்யா 46 படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கி, விரைவில் முடித்துவிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் 2026 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் எனவும் தகவல் பரவி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, வாடிவாசல் திரைப்படம் சூர்யா 46 படத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் 2025 மே அல்லது ஜூன் மாதத்தில் திரைக்கு வரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நடிகர் சூர்யா அடுத்த ஆண்டு அடுத்தடுத்த மாதங்களில் தன்னுடைய படங்களை களமிறக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.